இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 75 ஆவது ஆண்டின் நிறைவைக் குறிக்கும்- வெற்றியைக் – குறிக்கும் நிகழ்வுகள் இன்று பிரான்ஸிலும் ஏனைய பல நாடுகளிலும் நடைபெறுகின்றன.
பொது முடக்கம் காரணமாக இன்றைய நாளில் இடம்பெறுகின்ற உத்தியோக பூர்வ நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாமற் போயிருக்கிறது. ஒரு பொது விடுமுறை தினமான இன்றைய நாளையும் ஜரோப்பியர்கள் வீடுகளுக்குள்ளேயே கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரான்ஸில் வழமைக்கு மாறாக இன்று காலை Champs-Elysées போர் வீரர் நினைவிடத்தில் (Arc de Triomphe) நடந்த மரியாதை செலுத்தும் நிகழ்வில் அதிபர் மக்ரோனுடன் முன்னாள் ஜனாதிபதிகளான நிக்கலஸ் சார்கோசியும் பிரான்ஸுவா ஹொலன்டும் கூட்டாகக் கலந்து கொண்டமை நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இன்றைய நிகழ்வில் அரசுத் தலைவர்களுடன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர், படைகளின் தலைமை ஜெனரல் ஆகிய மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
உத்தியோகபூர்வ நிகழ்வில் நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் முன்னாள் அதிபர்களின் பிரசன்னத்தை அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் என்று அந்த இரு கட்சிகளினதும் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரெஞ்சுக் குடியரசைப் பொறுத்தவரை இன்றைய நாள் ஒரு முக்கிய குடியரசு தினம்.
அந்த நோக்கிலான முக்கியத்துவம் கருதியே நிக்கலஸ் சார்கோசி நிகழ்வில் பங்கேற்றார் என்று அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது குடியரசின் பாரம்பரியம் என்று அவை சுட்டிக்காட்டின.
அதிபர் ஹொலன்ட் வருகை தந்தமையை அரசியலாக்க வேண்டாம் என்று சோஷலிசக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
08-05-2020 (குமாரதாஸன்)