உலகம் மோசமான அளவில் அணு ஆயுதப்போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளார் பிரித்தானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர். உலகம் ஆபத்தான அளவில் அணு ஆயுதப்போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது, அதன் பின்னணியில், ரஷ்யா, சீனா, ஈரான் முதலான நாடுகள் உள்ளன என்கிறார் பிரித்தானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரானசர் ஸ்டீபன் லவ்க்ரோவ் (Sir Stephen Lovegrove).
பனிப்போர் காலகட்டத்தின்போது அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது. அதற்குக் காரணம், அப்போது நேட்டோ அமைப்பும் ரஷ்யாவும் தங்களுக்குள் பரஸ்பர புரிதலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடிந்தது.
ஆனால், இப்போது அந்த சூழல் இல்லை. சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் மீண்டும் சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தங்களை மீறியுள்ளன, அதேபோல், வடகொரியாவும் ஈரானும்கூட அணு ஆயுத அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.
உக்ரைன் போரையும், மாஸ்கோவிலும் பீஜிங்கிலும் நடத்தப்படும் இரகசிய ஆட்சியையும் பார்க்கும்போது, எப்போது வேண்டுமானாலும் உலகத்திற்கு திடீரென பிரச்சினை உருவாகலாம் என எதிர்பார்க்கமுடிகிறது என ஸ்டீபன் லவ்க்ரோவ் (Sir Stephen Lovegrove)கூறியுள்ளார்.
அதாவது சீனாவும், ரஷ்யாவும் தங்கள் அணு ஆயுதங்களின் திறனை மேம்படுத்தி வருகின்றன. கூடவே ஈரான், வடகொரியா போன்ற நாடுகளும் அணு ஆயுதங்கள் உருவாக்க போட்டிபோட்டுக் கொண்டு முயற்சி செய்கின்றன.
மாபெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு, ரஷ்யாவானாலும் சரி, சீனாவானாலும் சரி மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியின்போது பிரச்சினை கைமீறிப்போகுமானால், முடிவு அணு ஆயுதப்போராக இருக்கலாம் என்பதே அமைதியை விரும்புவோர் கூறும் எச்சரிக்கை அவர் தெரிவித்துள்ளார்