துபாய் நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புர்ஜ் கலீபா, துபாய் மால், புர்ஜ் அல் அரப், பால்ம் ஜுமைரா, பல்வேறு பொழுது போக்கு மையங்கள், கடற் கரை பகுதிகள் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று ஒன்று வருகிற 22-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த நீரூற்று துபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் உள்ளது. இந்த நீரூற்று ‘தி பாய்ண்ட்’ என அழைக்கப்படும்.
இந்த புதிய நீரூற்று கடல் பகுதியில் 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீட்டர் உயரம் வரை செல்லக் கூடியதாக இருக்கும். மேலும் இதில் 3 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நீரூற்றாக இது கருதப்படும்.
இந்த நீரூற்றில் 5 வெவ்வேறு வகையான வடிவில் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் நடக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சியினை பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் நீரூற்றானது வண்ண விளக்குகளில் நடனமாடும் வகையிலான நிகழ்ச்சி 3 நிமிடம் நடக்கும். தொடக்க நாளான வருகிற 22-ந் தேதி மாலை 4 மணி முதல் பொதுமக்கள் இங்கு வந்து நிகழ்ச்சிகளை காண வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரூற்று மட்டுமல்லாது இசை மற்றும் நடன நிகழ்ச்சி, மேஜிக்கான வாணவேடிக்கை நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் 5 ஆயிரம் பேருக்கு எல்.இ.டி. கைப்பட்டை வழங்கப்படும். மேலும் நகீல் மாலில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை இலவச பஸ் வசதியும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ளது.