உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2013-17 மற்றும் 2018-22-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவீதம் குறைந்திருந்த போதிலும், இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 14 சதவீதம் இறக்குமதியை அதிகரித்திருப்பதும், அதற்கு அதிகமான ஆயுதங்களை வழங்கும் நாடாக சீனா இருப்பதும் சிப்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் முதல் 5 இடங்களை முறையே அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.