உலக அழகி பட்டத்தை வென்ற ஜமைக்கா பெண் ; இந்திய அழகிக்கு 3-வது இடம்!

  • Post author:
You are currently viewing உலக அழகி பட்டத்தை வென்ற ஜமைக்கா பெண் ; இந்திய அழகிக்கு 3-வது இடம்!

இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொணடனர். பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் (Vanessa Ponce de Leon) மகுடம் அணிவித்தார்.

உலக அழகி பட்டத்தை வென்ற ஜமைக்கா பெண் ; இந்திய அழகிக்கு 3-வது இடம்! 1

மொரான்ட் பே-யில் பிறந்து வளர்ந்த டோனி, தற்போது அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, டயானா ஹைடன், யுக்தா முகி, மனுஷி சில்லார் உள்ளிட்டோர் உலக அழகிகளாக வெற்றிபெற்றாலும், முதன்முறையாக சுமன் ராவ்தான் 3-வது இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019 என முடிசூட்டப்பட்டது.
சுமன்ராவ் உதய்பூருக்கு அருகிலுள்ள ஆய்தானா கிராமத்தில் பிறந்தவர் ஆவார். அவருக்கு ஒரு வயது இருக்கும்போது அவரது குடும்பம் முமபைக்கு இடம்  பெயர்ந்தது. சுமனின் தந்தை ஒரு நகைக்கடைக்காரர், அவரது தாய் ஒரு இல்லத்தரசி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பள்ளிபடிப்பு முடிந்ததும், சுமன் மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படிப்பைத் தொடங்கினார். அவர் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞரும் கூட. 2018 ஆம் ஆண்டில் மிஸ் நவிமும்பை போட்டியில் சுமன் பங்கேற்று 2-வது இடம் பெற்றார். அதன்பிறகு, மிஸ் ராஜஸ்தான் 2019 போட்டிக்கு சுமன் ஆடிஷன் செய்து பட்டத்தை வென்றார். மிஸ் இந்தியா 2019 போட்டியில், சுமன் ராஜஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த பட்டத்தையும் வென்றார்.

பகிர்ந்துகொள்ள