உலகெங்கிலும் பயங்கரமான கிருமிகளின் தொற்று பரவும் பட்சத்தில் எடுக்கப்படக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைகளை உலகநாடுகள் தகுந்த முறையில் மதிப்பளித்து கவனத்தில் எடுத்திருந்தால், “கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கமுடியுமென நேர்வேயின் முன்னாள் பிரதமரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான “Dr. Gro Harlem Brundtland” அம்மையார் சாடியுள்ளார்.
ஒஸ்லோ பல்கலைக்கழகத்திலும், அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலும் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவுசெய்த அம்மையார், நோர்வே தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், நோர்வேயின் பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர்.
நோர்வேயின் அரசியலிலிருந்து ஒதுங்கிய இவர், 1998 முதல் 2003 ஆம் ஆண்டுவரை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்திருந்தார். “HIV” மற்றும் “SARS” வைரசுக்களின் பரவல் அதிகமாக இருந்த காலத்தில், உலக சுகாதார நிறுவனத்தில் தலைவராக பொறுப்பிலிருந்த அம்மையார், இவ்வைரசுக்களின் பரம்பலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஆற்றிய பணிகளுக்காக அப்போதைய உலகத்தலைவர்களால் பெரும் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்.
உலகளாவிய ரீதியில் ஆபத்தான கிருமிகளின் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், 2018 ஆம் ஆண்டில், உலகவங்கியின் அனுசரணையோடு தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான அறிக்கையை தயாரிப்பதில் தலைமை தாங்கி பணியாற்றிய அம்மையார், “Global Preparedness Monitoring Board / GPMB” எனப்படும் அமைப்பின் மேற்படி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னேற்பாட்டு விதிமுறைகளை உலகநாடுகள் கவனத்தில் கொண்டிருக்கவில்லையென கவலை தெரிவித்துள்ளார்.
மேற்படி விதந்துரைகளை உலகநாடுகள் கவனத்தில் எடுத்து, முன்கூட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தயார் நிலையில் இருந்திருந்தால், “கொரோனா” வின் பரம்பலை கணிசமானளவு கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் எனவும், உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாமெனவும் மேலும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில், நிலைமைகளை ஒழுங்குபடுத்தி, சவாதசத்தையும் ஒருங்கிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான பணிகளில் “Global Preparedness Monitoring Board” எனப்படும் அமைப்பு தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இதற்காக, “G – 72 மற்றும் “G – 20” நாடுகளின் தலைவர்களோடு இணைந்தும் செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.