உலகெங்கும் மிக வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரசின் தாக்கத்தால் சரியத்தொடங்கியுள்ள உலக பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவரும் பொருட்டு, “G-20” நாடுகள் இணைந்து 5000 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பாராத மோசமான சூழ்நிலையில், உலக பொருளாதார சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு, காணொளி மூலமான அவசர சந்திப்பொன்றை 25.03.2020 அன்று நடாத்தியிருந்த “G-20” நாடுகள், சந்திப்பின் இறுதியில் இம்முடிவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் அரச வங்கிகளின் இயக்குனர்கள் போன்றவர்கள் உலக பொருளாதார சமநிலையை பேணுவதற்கான வேலைத்திட்டங்களில் இறங்குவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, “கொரோனா” பாதிப்பால் வீழ்ச்சி கண்டிருக்கும் நாடுகளுக்கான அத்தியாவசிய உதவிகள் முதன்மைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
“G-20” நாடுகள் அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன.