எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்வில் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் புதிதாக கொண்டுவர இருக்கும் நகல் தீர்மான வரைவு வெளிவந்துள்ள நிலையில் அது குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
குறித்த வரைவானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர் ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது. அத் தீர்மானமோ அதனுடைய குறைபாடுகளால்த் தான் தோல்வியடைந்தது.
தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும் போது இவ்வாறான ஒரு வரைவு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது.
தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே ஆறு வருடங்கள் சென்று விட்டன. இலங்கை அரசாங்கம் தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும் கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைவைத் தயாரித்தமை மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இது கண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள். இவ்வாறான வரைவானது போர்க் குற்றங்களையும் மனிதத்திற்கெதிரான குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும்.
மனித உரிமைகள் சம்மந்தமாகவும் அடிப்படை நன்நடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும்.
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டனீக்ரோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.
அதே நேரம் இலங்கையின் வட கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற P2P பேரணிகள் தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணுகின்றோம்.
புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும் நலவுரித்துக்களையும் அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். தமிழ்த் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ நான் அறியேன்.
இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா. பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது!