உள்ளகப்பொறிமுறை பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை!

You are currently viewing உள்ளகப்பொறிமுறை  பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுடன் ஆயுதப்போராட்டத்துக்கு வித்திட்ட அடிப்படைக்காரணிகளை நிவர்த்தி செய்யவுமில்லை. மாறாக அது மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நல்லிணக்கம் என்ற போர்வையில் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கே வழிவகுக்கும் என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அடையாளம் கொள்கைக்கான ஆய்வு நிலையம், தமிழ் சிவில் சமூக அமையம், சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையம், விழுது, தளம், புழுதி மற்றும் குரலற்றவர்களின் குரல் ஆகிய 7 சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் போர்வையில் இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன புதியதொரு உள்ளகப்பொறிமுறையை முன்மொழிந்துள்ளது. இப்பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுடன் ஆயுதப்போராட்டத்துக்கு வித்திட்ட அடிப்படைக்காரணிகளை நிவர்த்தி செய்யவுமில்லை.

பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகமானது கடந்தகால மீறல்கள் தொடர்பில் வழக்குப்பதிவு மற்றும் விசாரணை ஆகிய செயன்முறைகளை உள்ளடக்கிய வலுவானதும், முழுமையானதுமான சர்வதேசப் பொறிமுறையைத் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றது. உண்மைக்கான ஆணைக்குழுவினால் மாத்திரம் இக்கோரிக்கையை நிறைவேற்றமுடியாது. மாறாக இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நல்லிணக்கம் என்ற போர்வையில் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கே வழிவகுக்கும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை இலங்கை அலட்சியப்படுத்தியுள்ளமையும், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வட, கிழக்கு மாகாணங்களைச் சிங்களமயமாக்கும் செயற்பாடுகளும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான முன்மொழிவு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே என்பதைக் காண்பிக்கின்றது.

நாட்டில் கடந்த காலங்களில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் பொறிமுறைகளின் தோல்வியும், அதனுடன் தொடர்புடைய அனுபவங்களும் அரசாங்கத்தின் மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை முற்றாக அழித்துவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளகப்பொறிமுறையில் பங்கேற்கவேண்டுமானால், முதலில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும். அதுமாத்திரமன்றி கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டும்.

மேலும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிவர்த்திசெய்வதற்கு அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிக்கான முழுமையானதும், விரிவானதுமான அணுகுமுறையே தற்போது அவசியமாகின்றது. ஆகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் சர்வதேச சமூகத்தின் பங்கேற்புடன் அவசியமான ஏற்பாடுகளை உள்ளடக்கிய, நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதற்கு ஏதுவான விரிவான அணுகுமுறையை நிறுவவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply