இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் இலங்கை, தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (1) வாசிக்கப்பட்டதுடன், அத்தோடு உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு அன்றைய தினமே ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற 55 ஆவது கூட்டத்தொடரின் 13 ஆவது அமர்வில் உறுப்புநாடுகளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஹிமாலி அருணதிலக மேலும் கூறியதாவது:
உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும், மனித உரிமைகளும் மிகப்பாரதூரமாக மீறப்பட்டுவருகின்றன.
எனவே காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் அவசியம் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்போருக்கான உதவிகள் அவர்களை உரியமுறையில் சென்றடையவேண்டும். மாறாக இத்தகைய மிகமோசமான மீறலைக் கருத்திலெடுக்கத்தவறுவது சர்வதேச மனித உரிமைகள் சார்ந்து இயங்கும் கட்டமைப்பின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும்.
அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அரசியல்மயப்படுத்தப்படல் மற்றும் துருவமயப்படுத்தப்படல் போன்ற காரணிகளால் அதன் உண்மையான இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். எனவே பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு அமைவாக, தேசிய ரீதியிலான சவால்கள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் உலகின் தென்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம்செலுத்திவிட்டு, ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பது ஏற்புடையதல்ல.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் எவ்வகையிலும் பயன்தராது. எனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, எமது நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியதும், ஏற்புடையதுமான பேரவையின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்.
மேலும் நாம் ‘ஒரே சீனா கொள்கைக்கு’ ஆதரவளிப்பதுடன், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்கின்றோம். அத்தோடு இறையாண்மையுடைய எந்தவொரு நாட்டினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தார்.