முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் தாக்குதலின் பின்னணியில் பொலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் நாகர்சோலை பகுதியில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளமையினை முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.
காடழிப்பு தொடர்பில் செய்தி சேகதரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை 17.11.2020 இன்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வழக்கில் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிகமான தகவல்களை முழுமையாக சமர்ப்பிக்குமாறு பொலீசாரிடம் மன்று கேட்டதற்கு இணங்க பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்த இடங்களில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யார் அழித்தது என்பது தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்த முடியாது இருப்பதாக பொலீசாரும் வனவளத்திணைக்களத்தினரும் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த பகுதியில் காடழிப்பு தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அழிக்கப்பட்ட மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன ஆனால் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என மன்றில் தெரிவித்துள்ளனர்.