ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்!

You are currently viewing ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறி மாறி வரும் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், ஊடகவியலாளர்களை  காவல்துறை மற்றும் சில மாபியாக்களை, வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 12ம் திகதி ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் காலாவதியான திகதி இருப்பதாக எமது ஊடகவியலாளர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அது குறித்து மக்கள் கருத்துக்களை பதிவு செய்ததன் பின்னர் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரிடம் அது குறித்து குறிப்பிட்ட ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது இது குறித்து எனக்கு தெரியாது நீங்கள் அரசாங்க அதிபரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் நேரில் சென்று பேசிய பின்னர் அவர் குறித்த செய்தி தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து கூற மறுத்ததன் பின்னர் குறித்த ஊடக நிறுவனம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை தொடர்வு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறான அரிசி மூடைகள் மாவட்டம் பூராகவும் வழங்கப்பட்டுள்ளது எனவும் இது இரண்டு நாட்களுக்கு முன்னரே பொதி செய்யப்பட்ட புதிய அரிசி என கருத்து கூறியதன் பின்னரே குறித்த செய்தியை குறிப்பிட்ட ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த செய்தி வெளியாகியதன் பின்னர் அரசாங்க அதிபர் உட்பட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் பினாமிகள் சிலர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதுடன் செய்தி சேகரித்து அனுப்பிய ஊடகவியலாளர் குறித்து அவரது ஊடக நிறுவனத்திடம் பல அவதூறான பொய்யான சேறு பூசும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

இதைவிட செங்கலடி பிரதேச ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரும் செய்திகளை பொய் என்று கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மக்களிடம் சென்று அவர்களை அச்சுறுத்தி நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள்? நீங்கள் ஏன் மீடியாவுக்கு கொடுத்தீர்கள் உங்களுக்கு சமூர்த்தியை வெட்டுவார்கள், அரசாங்க உதவி கிடைக்காது என்று கூறி அவர்களது கருத்தை வாபஸ் பெறச் சொல்லி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இவருக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ஆதரவு வழங்கி வருகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கு மற்றும் ஊழல் குறித்து செய்திகள் வெளிவரும் போது அது குறித்து கவனம் செலுத்தாத மாவட்ட நிர்வாகம் அந்த செய்திகளை பிரசுரிக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதும் பாதுகாப்பு தரப்பினரை வைத்து அச்சுறுத்துவதுமாக உள்ளது.

உண்மையில் அரிசி மூட்டைகளில் காலாவதியான திகதி இடப்பட்டிருந்தமை குற்றமே. ஒரு அவசர கால நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் காலாவதியான திகதி இருந்தால் அது குறித்து செய்தி வெளியிட வேண்டிய ஊடகவியலாளர்களின் பொறுப்பு.

அதுவும் பத்து வருடங்களுக்கு முந்திய உர பைகளில் புதிய அரிசி பொதி செய்து வினியோகம் செய்துவிட்டு அதனை யாருக்கு கூறாமல் வினியோகம் செய்தது மாவட்ட அரச நிர்வாகத்தின் தவறு. எனவே அரிசி மூடைகளை வெளியே பார்ப்பவர்களுக்கு அதற்குள் பழைய அரிசி இருக்கிறதா? புதிய அரிசி இருக்கிறதா என்று எப்படி தெரியும். இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகருக்கே தெரியவில்லை. இவ்வாறான நிலையில் மாவட்ட அரச நிர்வாகம் தாங்கள் விட்ட தவறை மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி மூட்டைகள் பொதி செய்ய உரப் பைகள் இல்லை என்று கூறி சுமார் பத்து வருடங்களுக்கு முந்திய பைகளில் புதிய அரிசிகளை பொதி செய்து யாருக்கும் தெரியாமல் நிவாரணமாக வினியோகம் செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது? அதைவிட அது குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை அச்சுறுத்துவதும் அரசாங்க அதிபரின் அனுமதி இல்லாமல் நீங்கள் ஏன் செய்தி எடுத்தீர்கள் என்று ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலாளர்கள் அரசாங்கம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து புதிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறிப்பாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களின் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் குறித்து எந்த செய்திகளும் வெளியே வரக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் அவர் குறித்த கருத்துக்களை வெளியிடும் பொதுமக்கள் அந்த கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீது அரசாங்கம் வழங்கிய அதிகாரங்களை தவறாக  காவல்துறையைக் கொண்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருகிறார்.

இவர் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மிரட்டுவதற்கு முக நூல்களில் ஊடகவியலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவதற்கு சில மாபியாக்களையும் அரசியல் வாதிகளையும் வைத்துள்ளார். இது குறித்து பல தடவைகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரச நிர்வாகம். ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவதும் அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து சிறீலங்கா அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது

பகிர்ந்துகொள்ள