களியாட்ட நிகழ்வுகளை நடத்தியமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை மற்றும் அநாவசியமாக ஒன்றுகூடியமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தின் போது போக்குவரத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட 40 வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்ட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை மதிக்காது செயற்படுவோர் நாட்டில் உள்ளமை இதனூடாக புலப்படுவதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம் (24) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், அன்றைய தினம் பிற்பகல் 2 மணியிலிருந்து மீண்டும் குறித்த மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதுடன், நாளை பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும், நாளை மறுதினம் காலை 6 மணியின் பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.