ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் பளையிலிருந்து வெளியேற முடியாத நிலையில் மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் ஒன்றான பசை்சிலைப்பள்ளி (பளை) பிரதேச மக்கள் தங்களது பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட, நீதிமன்ற வழக்கிற்கு, அரச திணைக்கள தேவைகளுக்கு, அத்தியாவசிய தேவைக்கு அல்லாத பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள என பளையிலிருந்து கிளிநொச்சி நகருக்கு செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு வருகின்ற பொது மக்களை ஆனையிறவில் படையினர் செல்லவிடாது திருப்பி அனுப்புகின்றனர் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது பளை பிரதேசம் சிவில் நிர்வாக எல்லைக்குள் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் இருப்பதாகவும், இராணுவத்தின் நிர்வாக எல்லைக்குள் பளை யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனையிறவில் சோதனை முகாமில் கடமையில் இருக்கும் இராணுவத்தினர் யாழ்ப்பாண இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றவர்கள் எனவும் இதனால் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாம் கிளிநொச்சிக்கு செல்ல முடியாதுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பளையில் உள்ள பொது மக்கள் யாழ்ப்பாணத்திற்கும் செல்ல முடியாது எழுதுமட்டுவாழ் பகுதியில் தடை, மறுபுறம் மருதங்கேணியில் தடை என எல்லாப் பக்கங்களிலும் தடை ஏற்படுத்தப்பட்டு பளை பிரதேச மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தம்மால் பயன்படுத்த முடியாதுள்ளது என்றும் தெரிவிக்கும் பொது மக்கள் இது தொடர்பில் அரச உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.