எகிப்தில் தேள் கடிக்கு இலக்காகி மூவர் பலி; 500 பேர் வரை பாதிப்பு!

You are currently viewing எகிப்தில் தேள் கடிக்கு இலக்காகி மூவர் பலி; 500 பேர் வரை பாதிப்பு!

எகிப்தில் கடும் புயல் மற்றும் கடும் மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் வீடுகள், மற்றும் வீதிகளுக்கு வந்த தேள்கள் கொட்டியதில் மூவர் உயிரிழந்தனர். அத்துடன், 500 பேர் வரையானோர் தேள் கடிக்கு இலக்காகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தேள் கடிக்கு இலக்காகி 500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளமை மருத்துவமனை தகவல்களின் பிரகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நைல் நதிக்கு அருகிலுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மற்றும் புயல் தீவிரமாக இருந்தது. பலத்த மழை- வெள்ளத்தை தொடர்ந்து பெருமளவான தேள்கள் அவற்றின் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி வீடுகள் மற்றும் வீதிகளுக்கு வந்துள்ளன. அத்துடன், பாம்புகளும் புற்றிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் மலைகள் மற்றும் பாலைவனங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு விஷ முறிவு மருந்துகள் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஷ ஜந்துகள் அதிகளவில் வெளியேறியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறும் மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எகிப்து கொழுத்த வால் கொண்ட தேள்களின் தாயகமாகும். அவை உலகிலேயே மிகவும் ஆபத்தானவை. இவற்றில் காணப்படும் விஷம் ஒரு மணி நேரத்திற்குள் மனிதர்களைக் கொல்லும் சக்திவாய்ந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேள் விசம் அதிகமாக உடலில் ஏறினால் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.

தேள் கடிக்கு இலக்காகி சிறிது நேரத்தில் உரிய சிகிச்சைகளைப் பெறுவதன் மூலம் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியும் எனவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply