எங்களை அழித்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாம்?

You are currently viewing எங்களை அழித்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாம்?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டம் அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வாகனப்பேரணி முன்னெடுக்கப்படுவதற்கும், அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு இனபேதங்களையும், கட்சி அரசியலையும் மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பொத்துவிலிருந்து மாபெரும் வாகன பேரணி வடக்கின் பொலிகண்டி வரையில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை அரசாங்கம் முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவற்றினை நிறுத்தி தமிழர்களின் தாயகத்தினை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கல் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக காணிகள் அபகரிக்கும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு வடகிழக்கு எங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளும் ஆதரவினை வழங்கி மிக பிரமாண்டமான பேரணியாக இதனை நடாத்த வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஜனநாயக விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு தயாராகியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வு வரையில் எனது பங்களிப்பு இதற்கு இருக்கும்.இந்த போராட்டத்திற்கு எவ்வாறான தடைகள் விதித்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து இந்த போராட்டத்தினை வெற்றியடையச்செய்வேன். இன்றைய நிமையினை உணர்ந்து இளைஞர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் தாயகம்அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பேரணியானது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கட்சிகளின் பிரதிநிதிகள்,சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள், இளைஞர், மகளிர் அணிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பு: இப்போராட்டத்திற்கு எங்களை அழித்த கட்சிகளின் இளைஞர் அணியின் ஆதரவு என்பது வேடிக்கையானது

பகிர்ந்துகொள்ள