இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே இன்று மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது.
எல்லையில் நடக்கும் மீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு இதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்
சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ”நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் எந்தவொரு அத்துமீறல்களையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.