எதிரிகளால் கண்டறிந்து அழிக்கபட முடியாதது என அடையாளப்படுத்தப்படும் நவீன ஏவுகணையை ரஷ்யா பாவனைக்கு எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஏவுகணை தொடர்பில், 2018 ஆம் ஆண்டில் ரஷ்யா அறிவித்திருந்தது போலவே, இவ்வகை ஏவுகணைகள், முழுமையான சோதனைகளின் பின், ரஷ்ய கடற்படையில் இணைக்கப்படுவதாகவும், இது தொடர்பில் ரஷ்ய அதிபர் பெருமை கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
“Poseidon” என்ற குறியீட்டு பெயருடன் அழைக்கப்படும் இவ்வேவுகணை, நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவப்படக்கூடியவை எனவும், அணுவாயுதங்களை காவிச்செல்லக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, மிகக்குறைந்த ஒலியளவோடு பயணிக்கக்கூடியவை எனவும், பாதையை மாற்றி மாற்றி பயணிக்கக்கூடிய இவ்வேவுகணைகள், எதிரிகளால் கண்டறியப்பட. முடியாதவை எனவும், இவை காவிச்செல்லும் அணுகுண்டுகள், ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விடவும் சுமார் 7000 மடங்கு அதிகமான அழிவை ஏற்படுத்த வல்லவை எனவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.
கடலுக்கடியில் 1000 மீட்டர்கள் ஆழத்திலிருந்து ஏவப்படக்கூடிய இவ்வகையான ஏவுகணைகள், மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில், 10.000 கிலோ மீட்டர்கள் தூரம்வரை பயணிக்கக்கூடியவை எனவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.