கொரோனாவை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், அதன் பின்விளைவுகள் வேறு சில பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளது ஐ.நா. சபையின் ஆய்வு முடிவுகள்!
கொரோனாவின் தாக்கம், அதனால் ஏற்படும் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றபோதும், பெண்களின் நலனையும், உரிமையையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த ஐ.நா. மக்கள்தொகை நிதியம் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கருத்தடை சாதனங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில், சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதாகவும் ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும் என்றும், இதனால், வரும் மாதங்களில், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்றும் ஐநா ஆய்வு தெரிவிக்கின்றது.
இதுமட்டுமல்லாது, ஆண்களும், பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 6 மாதங்களில், 3.10 கோடி குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்றும் ஐநா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஊரடங்கு குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும், ஐநா ஆய்வு எச்சரிக்கிறது. குழந்தை திருமணங்கள் அதிகரிக்க பொருளாதார சூழல் முக்கிய காரணியாக இருக்கும் என்றும், இது வருங்காலங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐநா குறிப்பிட்டுள்ளது. இவற்றை தடுக்கவும், பெண்களை உரிமைகளை பாதுக்காக்கவும் உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.