எதிர்வரும் வாரங்களில் அமெரிக்கா கடும் இழப்பவுகளை சந்திக்கவேண்டி வரலாமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
29.03.20 ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கும்போது, எதிர்வரும் இருவாரங்களில் “கொரோனா” பாதிப்புக்கள் உச்ச நிலைக்கு வரலாமென தான் எதிர்பார்ப்பதாகவும், உயர்ந்தபட்சமாக ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் இறக்க நேரிடலாமெனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த வாரத்தில் கணக்கெடுக்கப்பட்ட “கொரோனா” தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையானது, சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்றுக்கு ஆளானவர்களின் தொகையை விட அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அமெரிக்க அதிபர் நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களை மரணத்திலிருந்து காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அவர், அமெரிக்காவில் தற்போது நடைமுறையிலுள்ள “கொரோனா” கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30 ஆம் நாள் வரை நீடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “ஈஸ்டர்” தவக்கால முடிவில் அமெரிக்காவை மீண்டும் திறப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.