தமிழ்மக்களுடனும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களுடனும், மாவீரர் குடும்பங்களுடனும், தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் தமிழ் உறவுகளுடனும் மாத்திரம் தான் எங்களுடைய கூட்டணி அமையுமே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சிக்குள்ளும், 13 ஆவது திருத்தத்திற்குள்ளும் தீர்வை ஏற்கத் தயாராகிய எந்தவொரு தரப்புடனும் நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவது கிடையாது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
யாழ்.கொக்குவில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை(12.01.2023) மாலை இடம்பெற்ற திடீர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, தமிழ்மக்கள் கூட்டணி ஆகிய இரண்டு தரப்பினரும் தமிழ்மக்களிடம் பெறவிருக்கின்ற வாக்குகளை வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒற்றையாட்சியான 13 ஆவது திருத்தத்திற்குள் ஒரு தீர்வைப் பெற இணங்கப் போகின்றார்கள். அதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கி விட்டது.
தமிழ்மக்கள் இவ்வாறான கட்சிகளுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஒற்றையாட்சிக்கான ஆணையாகப் பார்க்கக் கூடிய அபாயம் காத்திருக்கின்றது. ஆகவே, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வை ஏற்கத் தயாராகிய தரப்புக்களைப் புறந்தள்ளி சரியான தரப்பாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குப் பலம் சேர்ப்பார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.