எம்மை வாழவிடுங்கள் – முன்னாள் போராளிகள் கோரிக்கை!

You are currently viewing எம்மை வாழவிடுங்கள் – முன்னாள் போராளிகள் கோரிக்கை!

மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. 

போரில் பங்கேற்ற இரண்டு தரப்புக்களில் தமிழ்த்தரப்பு தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் ‘வெற்றியீட்டிய தரப்பாக’ இருந்துகொண்டு இப்பிரச்சினையை அணுகுகின்றது என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்ணீர்மல்க சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எம்மை வாழவிடுங்கள் - முன்னாள் போராளிகள் கோரிக்கை! 1

ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் அவர்களிடம் மீளக்கையளிக்கப்படவேண்டும்.

குறிப்பாக போரில் உயிரிழந்த முன்னாள் போராளிகளை அவர்களது உறவினர்கள் நவம்பர் 27 ஆம் திகதியன்று நினைவிடங்களுக்குச்சென்று நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்த அமர்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளான செல்வநாயகம் அரவிந்தன், இராகிருஷ்ணன் பிரபாகரன், பாபு கஜேந்தினி மற்றும் பீலிக்ஸ் அன்ரன் கொலிக் ஆகிய நால்வரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.

அவர்களில் முதலாவதாக சாட்சியமளித்த செல்வநாயகம் அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவரும் தற்போது வவுனியாவில் வசித்துவருபவருமாவார். இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல் காரணமாக சிலகாலம் மாற்றுத்திறனாளியாக இருந்த அரவிந்தன், தற்போதும் அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகளின் விளைவாக ஏற்பட்ட உடல் உபாதைகளைக் கொண்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான அவர் இறுதிக்கட்டப்போர் மற்றும் அதன் பின்னரான வாழ்க்கைமுறை குறித்து ஆணைக்குழுவின் முன்நிலையில் அளித்த சாட்சியங்கள் வருமாறு:

‘இறுதிக்கட்டப்போரின்போது நாங்கள் ஒருசிறு தாக்குதலைக்கூட நடத்தமுடியாத நிலையிலேயே இருந்தோம். அவ்வாறு நடத்தும்பட்சத்தில் நாங்கள் இருந்த இடம் இராணுவத்தினரால் முழுமையாகத் தகர்த்தளிக்கப்படுவதற்கும் அதனால் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பதற்குமான வாய்ப்புக்கள் காணப்பட்டன. 

ஏனெனில் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் நாங்கள் (விடுதலைப்புலிகள்) தளங்களை அமைத்திருந்த இடங்களைத் தெரிவுசெய்யப்பட்டு, அவை இராணுவத்தினரால் ‘உயர் பாதுகாப்பு வலயங்களாக’ அறிவிக்கப்பட்டன. அதன் விளைவாக இடம்பெயர்ந்த மக்கள் எமது தளங்களைநோக்கி நகரத்தொடங்கினார்கள். அதனால் அவை நகரக்கூடிய முடியாதளவிற்கு மக்கள் செறிவுகூடிய இடங்களாக மாறின. 

எனவே இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படும்போது நாங்கள் கிளிநொச்சி, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் என்று படிப்படியாகப் பின்வாங்கிச்செல்லும் நிலையிலேயே இருந்தோம்.

எம்மை வாழவிடுங்கள் - முன்னாள் போராளிகள் கோரிக்கை! 2

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் உணவுப்பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் தீவிர ஷெல் மற்றும் மல்ட்டி பரௌ; தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் எனது உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியானார்கள். அதேவேளை இராணுவத்தின் தாக்குதல்களில் படுகாயமடைந்து நடக்கமுடியாத நிலையை அடைந்த என்னை இடம்பெயர்ந்துசெல்லும் மக்கள் தர்மபுரம், விஸ்வமடு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு வழியே தூக்கிவந்து புதுமாத்தளனில் விட்டுச்சென்றார்கள். 

புதுமாத்தளனை அடையும் வரையில் நான் பல இடங்களில் இடைநடுவில் விட்டுச்செல்லப்பட்டதுடன் ஆடைகளின்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நெடுந்தூரத்தைச் சென்றடையவேண்டிய மிகமோசமான பயணமாக அது அமைந்திருந்தது.

அதனைத்தொடர்ந்து நான் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு வைத்தியசாலையை இலக்குவைத்து இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கண்முன்னே பெருமளவானோர் செத்துமடிவதைப்பார்த்து அஞ்சிய நான் என்னை இரட்டை வாய்க்காலில் உள்ள புலிகளின் முகாமிற்கு மாற்றுமாறு கேட்டேன். ஒரு முகாமின் அமைப்பைக் கொண்டிராத அந்த முகாமில் மணலைத்தோண்டி அதன்கீழ் நானும் மேலும் பலரும் இருந்தோம். 

அதுமாத்திரமன்றி இல்ஙகையில் சமாதானத்தை வலியுறுத்தி தமிழக முன்னாள் முதல்வர் உண்ணாவிரதம் இருந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்களில் நான் இருந்த இடத்திற்கு அண்மையிலிருந்த ஐந்து வீடுகளும் முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டன. 

நந்திக்கடல் போரில் நாங்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்குப் பின்வாங்கி நகர்ந்தபோது வீதியோரங்களில் பொதுமக்களின் உடல்கள் வீங்கிப்பெருத்தும் முழுமையாக சிதைந்தும் கிடந்ததைக் காணமுடிந்தது’ என்று இறுதிக்கட்டப்போரின் காட்சிகளை அரவிந்தன் விபரித்தார்.

வவுனியா முகாமிலிருந்தபோது கைதுசெய்யப்பட்ட அரவிந்தன் சுமார் 6 மாதங்கள்வரை ஜோஸப் முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதுடன் 23 மாதங்கள்வரை அவர் பூசா தடுப்புமுகாமிலும் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அத்தோடு வழக்குகள் எவையுமின்றி பலவருடங்கள் சிறையிலிருந்த அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்டார்.

‘சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டதன் பின்னர் வாழ்க்கை முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டிய சூனிய நிலையிலிருந்தது. சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டதன் பின்னர் சுமார் ஒருவருடம் வரையில் வவுனியாவிலுள்ள குற்றப்புலனாய்வுத்திணைக்கள அலுவலகத்தில் தினமும் கையெழுத்திடவேண்டியிருந்ததால் ஒரு தொழிலுக்குச் செல்வதுகூட மிகவும் சவாலானதாகவே இருந்தது. 

தற்போதுவரை நாம் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டதொரு சமூகமாகவே இருக்கின்றோம். சுமார் 13,500 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இன்னமும் பெருமளவான முன்னாள் போராளிகள் கோயில்களிலும் பொது இடங்களிலும் யாசகம் கேட்கும் நிலையிலேயே உள்ளனர்.

அதுமாத்திரமன்றி நாம் வாழும் வடக்கின் பல பகுதிகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழுள்ளன. தற்போதும் மிகக்குறுகிய இடைவெளிகளில் இராணுவ சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு பொலிஸாரின் பணிகளை இராணுவத்தினரே முன்னெடுக்கின்றார்கள். 

குறிப்பாக முன்னாள் போராளிகள் இராணுவம் மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுவதுடன் அடிக்கடி விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றார்கள். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றார்கள். 

நாங்கள் ஏனையோரைப்போன்று சுதந்திரமானதும் சுமுகமானதுமான வாழ்க்கைமுறையொன்றைப் பின்பற்றமுடியாத நிலையிலிருக்கின்றோம். மனித உரிமைகள் ஆணைக்குழுக்களில் சென்று முறைப்பாடளித்துவிட்டு, அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கவேண்டாம் என்பதே ஆளுந்தரப்பின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பதிலாக இருக்கின்றது. போரில் பங்கேற்ற இருதரப்புக்களில் ஒரு தரப்பான நாங்கள் தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம்.

போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் என்ன? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகால நிகழ்வுகளை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. படையினரிடம் கையளிக்கப்பட்ட பெருமளவானோரைக் காணவில்லை. 

அவர்களுக்கு என்னநேர்ந்தது என்பதை வெளிப்படுத்தாமல் மரணச்சான்றிதழ்களை வழங்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? முன்னாள் போராளிகளையும் போரில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூருவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றது. 

எம்மை வாழவிடுங்கள் - முன்னாள் போராளிகள் கோரிக்கை! 3

மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையிலிருக்கின்றது. அதன்கீழ் முன்னாள் போராளிகள் மாத்திரமன்றி நாட்டின் அனைத்து இன, மதங்களைச் சார்ந்த பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுக் காரணங்களின்றித் தடுத்துவைக்கப்படுகின்றார்கள்.

எனவே ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகும். அதேபோன்று இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் அவர்களிடம் மீளக்கையளிக்கப்படவேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளி உயிரிழந்த தினமான நவம்பர் 27 ஆம் திகதியன்று முன்னாள் போராளிகளை அவர்களது நினைவிடங்களுக்குச்சென்று நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும்’ என்றும் அரவிந்தன் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து சாட்சியமளித்த, போரில் இரண்டு கால்களையும் இழந்த இராமகிருஷ்ணன் பிரபாகரன், அரவிந்தனின் கருத்துக்களை ஆமோதித்ததுடன் தாம் வேறு எதனையும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை என்றும் போரில் உயிரழந்தவர்களை (போராளிகள் உள்ளடங்கலாக) நினைவுகூருவதற்கு அனுமதிக்குமாறு மாத்திரமே கோருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கம் தொடர்பிலும் சுட்டிக்காட்டிய அவர், மூன்று தசாப்தகாலப்போர் உருவாகுவதற்கும் இதனைப்போன்ற பின்னணிக்காரணங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் ஆணைக்குழுவின் முன்நிலையில் சாட்சியமளித்த முன்னாள் பெண்போராளியான பாபு கஜேந்தினி இராணுவத்தினரால் நடத்தப்பட்ட பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலில் கணவரையும் சகோதரனையும் இழந்தவராவார். தற்போது வவுனியாவில் வசித்துவரும் அவர் மாதந்தம் ஒருமுறையேனும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தனது வீடு உள்ளடங்கலாக முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டதுடன் அதனால் முகங்கொடுக்கவேண்டியேற்பட்டுள்ள அசௌகரியங்கள் மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கடல் தொடர்பில் எடுத்துரைத்தார். குறிப்பாக முன்னாள் பெண்போராளிகளால் தலைமைதாங்கப்படும் பெண்தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத முன்னாள் பெண்போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் சாட்சியமளித்தார்.

போரின் வடுக்கள் மற்றும் அதன் பின்னரான நெருக்கடிமிக்க வாழ்க்கைமுறை தொடர்பில் கண்ணீருடன் சாட்சியமளித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் கருத்துக்களைப் பதிவுசெய்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு, இவைதொடர்பில் ஆராய்ந்து அதனடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதாக போராளிகளிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply