மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.
தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன்.
அவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்சியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன். ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி,ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது. காலவெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. (ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.) இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.
பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங்கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது. பிரபாகரன், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும். உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20கட்சித்தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.
பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.
தன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வரவேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச்சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார்.
அதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீதுதிரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.
“என்ன? உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று. 1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டுகொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவுசெய்தார். அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது.
இதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.
1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம் 2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப் படும். 3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக்காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’, என எம்.ஜி.ஆர் கூறியபொழுது பிரபாகரன் கூறியபதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது. “கேவலம்! மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.
நாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக்கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார். இந்தியப்பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.
ஆசைவார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்கமுடியாது என்பதை பிரதமர் இராஜீவிற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.
முன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வரமுடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம். சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.
தமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 1987ஆம் ஆண்டு, சனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப்போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.