பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே மிகமோசமாக நடத்தப்படும் பட்சத்தில், வட – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்கள் இராணுவத்தினரால் எவ்வாறு நடத்தப்படக் கூடும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அரச புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்த சம்பவமொன்று வெள்ளிக்கிழமை மருதங்கேணியில் பதிவானது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் உள்ளடங்கலாகப் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் சிங்களமொழி பேசும் பொலிஸாரின் உதவியுடன் இராணுவத்தினரால் எவ்வாறு நடத்தப்படக்கூடும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதில் தாமதமேற்படும் பட்சத்தில், அது அவர்களை மேலும் ஊக்குவிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.