ஐரோப்பிய நாடுகளில் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பதன் மூலம், ரஷ்ய எரிவாயுவின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிகவிலைக்கு ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தடை செய்யப்படுவதாக கொள்ள முடியும் என்பதால், இதன்மூலம் எரிவாயு விற்பனையில் அதிக பொருளாதாரத்தை ரஷ்யா ஈட்டுவதை தடுப்பதோடு, ரஷ்யாவின் இராணுவபலத்துக்கான பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்புக்களை ஏற்படுத்த முடியுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டதையடுத்து, எதிர் நடவடிக்கையாக தன்னிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்த ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் கணிசமான குறைப்பை ரஷ்யா மேற்கொண்டதையடுத்து, நோர்வே தனது எரிவாயு உற்பத்தியை அபரிமிதமான அளவில் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், இன்றைய நிலையில் ரஷ்யாவை விட அதிகளவில் எரிவாயுவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஷ்ய எரிவாயு விலையை விடவும் மிகவும் குறைந்த விலையில் எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கான இரகசிய உடன்பாடொன்று நோர்வேக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் எட்டப்பட்டிருந்ததையடுத்து மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இது விடயம் தொடர்பான ஆவணங்கள் இப்போது ஊடகங்கள் கையில் சிக்கியுள்ளன.
இதுவிடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைமைக்கும், நோர்வே பிரதமருக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்களின்போது, ரஷ்யாவின் எரிவாயு விற்பனையை உடைக்கும் அனைத்து வழிமுறைகளையும் ஆராயாய்வதற்கு நோர்வே தயாராக இருப்பதாகவும், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாரிய எரிவாயு பற்றாக்குறையை எவ்விதத்திலாவது நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் தொடர்பான பல திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன எனவும், எனினும், இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையில் எரிவாயுவை வழங்கும் ஒப்பந்தங்கள், எரிவாயுவை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களோடு செய்துகொள்ளப்படுவது முக்கியமெனவும் நோர்வே பிரதமர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் திட்டப்படி, எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதால் எழக்கூடிய பொருளாதார இழப்பை, இதுவரை நாளும் தாங்கள் சம்பாதித்துக்கொண்ட அதிகப்படியான வருமானத்திலிருந்தே எரிவாயு நிறுவனங்கள் ஈடுசெய்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறமையை அடுத்து, எரிவாயு நிறுவனங்கள் தமது அதிருப்தியை வெளியிடத்தொடங்கியுள்ளன.
எரிவாயுவுக்கான பற்றாக்குறை உள்ள இத்தருணத்தில், எரிவாயுவுக்கான கோரல்களும் அதிகரித்து வருவதால், எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பும் வழமையானதாக இருக்கும் நிலையில், சர்வதேச சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு எரிவாயுவை விநியோகம் செய்வதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டி நிற்கும் மேற்குலகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, மிகக்குறைந்த விலையில் எரிவாயுவை விற்பனை செய்து தங்கள் பொருளாதார இலாபத்தை படுகுழிக்குள் தள்ள இந்நிறுவனங்கள் தயாராக இல்லையென்ற செய்தியே இந்நிறுவனங்களிடமிருந்து வெளிப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் மேற்படி ஆலோசனையை மிகக்கடுமையாக எதிர்த்துள்ள ரஷ்யா, மிக முட்டாள்தனமான யோசனையென இதை வர்ணித்துள்ளதோடு, இதுவிடயமாக விடயங்கள் நகர்த்தப்பட்டால், எரிவாயு, எண்ணெய், டீசல் மற்றும் நிலக்கரி உட்பட, ஐரோப்பாவுக்கான அனைத்து வழங்கல்களையும் முற்றாக நிறுத்தி விடுவதாக எச்சரித்துள்ளதோடு, ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான தனது வழங்கலை அதிகரிப்பதன்மூலம் தனது பொருளாதார நிலையை தக்கவைக்க முடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.