எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் “சாந்தன் துயிலாலயம்” சாந்தனின் தாயாரால் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் “சாந்தன் துயிலாலயம்” உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உண்மைக்கு மாறான விசாரணை அடிப்படையில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலமானார்.
அவரது விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் 33 வருடங்களாக போராடி வந்தனர்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தனை, மீள தமிழீழத்திற்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வருட காலமாக பெரிதும் முயற்சித்தனர்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அதன் பின்னரே, சாந்தனின் உடல் தாயகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அன்னாரின் சொந்த ஊரான எள்ளங்குளத்தில் உள்ள துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.