எழுச்சிப்பேரணியும் குழப்ப மனிதர்களும்!

You are currently viewing எழுச்சிப்பேரணியும் குழப்ப மனிதர்களும்!

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் விரிவாக தெரியவருவதாவது,

திருமலையில் தொடங்கிய முறுகல்

கடந்த 03ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் தொடங்கிய பேரணி நேற்று முன்தினம் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படுவதற்கு முன்பாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பேரணிக்கு முன்பாக தங்களுடைய ஆதரவாளர்களுடன் புறப்பட்டிருந்ததாகவும்

பின்னர் சில சமரச முயற்சிகளுக்குப் பின்னர் இரண்டு தரப்பும் ஒன்றாகவே முல்லைத்தீவை நோக்கி நகர்ந்ததாகவும் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது, முதலில் குழப்பம் ஒன்று நடந்தது உண்மை தான் பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அருவிக்குத் தெரிவித்தார்.

திருகோணமலை குழப்பத்திற்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தபோது,

போராட்டத்தினை ஏற்பாடு செய்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் போராட்டத்தின் தொடக்கத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகின்றபோது கட்சிகளுக்கு இடையிலான பிணக்காக மாறலாம் என்பதால் மதகுருமார் முன் வரிசையில் வருமாறும் அதன் தொடராக அரசியல் பிரமுகர்களை வருமாறும் அறிவுறுத்தியதாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதேபோல மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை போராட்டம் வந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நின்ற இடத்திற்கு போராட்டப் பேரணியில் பங்கேற்றவர்களை அழைத்துச் சென்று சந்திக்கவைத்ததாகவும் ஏற்பாட்டாளர்களால் விசனம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த இரண்டு விடயங்களும் தமிழரசுக்கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரநிதிகளுக்கும் இடையிலான முறுகலின் தொடக்கமாக வெடித்திருந்தது.

இதனை அடுத்தே திருகோணமலையிலிருந்து தனியாக முதலில் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தலைமையிலான அணியினர் முல்லைத்தீவு நோக்கி முதலில் புறப்படத் தலைப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திருகோணமலையின் தொடராக ஏனைய மாவட்டங்களுக்குப் போராட்டங்கள் நகர்ந்தபோது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வரிசையில் இடம்பெற்றிருக்கவில்லை.

கிளிநொச்சியில் மதகுருமாருடன் முரண்பட்ட சாணக்கியன்

இன்று கிளிநொச்சியில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அங்கு வந்திருக்கின்றார். அவர் வந்தபோது அங்கு நின்றிருந்த மதகுருக்கள் மார் தம்மை மதித்து வணக்கம் செலுத்தவில்லை என்று தெரிவித்து, அவர்களுடன் முரண்பட்டிருந்தார் என்று பேரணில் பங்கேற்பதற்காக அங்கு கூடியிருந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் தந்தை செல்வாவின் பேரன் தாக்கப்பட்டார்

சாவகச்சேரியில் பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் ஏற்பாட்டில் அவருடைய அலுவலகத்துக்கு முன்பாக சிறப்பு வழிபாடு ஒன்று நடைபெற்றிருந்தது. அதேவேளை பேரணியின் முன்வரிசையில் இடம்பெறவேண்டும் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கைவிடுத்து தர்க்கப்பட்டதாகவும் அதன் தொடராக அந்த இடத்திற்குச் சென்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் முன்வரிசைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் சம்பவத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து பாதுகாப்பு அரண் அமைத்து நகர்ந்து வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து தமிழரசுகட்சி ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர். அதன்போது அந்த விடயங்களை கையாள முற்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியின் ஏற்பாட்டுக்குழுவின் வடக்கு மாகாண இணைப்பாளராக செயற்பட்ட தந்தை செல்வாவின் பேரனான இளங்கோ மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

பொலிகண்டிக்குழப்பம் நடந்தது என்ன?

பின்னர் பேரணி யாழ்மாவட்டத்தின் பிரதான பகுதிகளைக் கடந்து பொலிகண்டியை அண்மித்த போது அங்கு மீண்டும் பாரிய குழப்பம் ஏற்பட்டது.

பொலிகண்டியின் ஆலடி, செம்மீன்படிப்பகம் இரண்டு இடங்கள் தான் முக்கிய இடம்பெற்றிருக்கின்றன.

பேரணி பொலிகண்டியில் செம்மீன்படிப்பகப் பகுதியை அண்மித்து அங்கு பேரணியை முடிப்பதாக ஏற்பாட்டுக்குழு திட்டமிட்டிருந்ததாக தெரியவருகிறது.

ஆனால்,

ஆலடிப் பகுதியில் சுமந்திரன் தலைமையில் சாணக்கியனால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நினைவாக கல் ஒன்று நாட்டப்பட்டிருக்கிறது.

சம்பவத்தை அடுத்து அங்கு கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட பிரதிநிதிகள் சாணக்கியனின் வாகனத்தினைச் சுற்றிவளைத்திருக்கின்றனர். பொத்துவிலில் போராட்டத்தினைத் தொடங்கியவன் நானே, எனவே முடித்துவைப்பதும் நானே தான் என்று அவர் தெரிவித்தார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் காரைச் சூழ்ந்துகொண்டதால், சாணக்கியன் வாகனத்தை வேகமாக செலுத்திப் புறப்பட்டிருக்கிறார். அங்கு நின்றிருந்த இருவரின் கால்களில் ஏறி வாகனம் சென்றதாக அங்கு கூடியிருந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிகண்டியின் முக்கியபகுதியில் ஆலடி காணப்படுவதால் அங்கே தானே நிகழ்வினை முடிக்கவேண்டும் என்று அந்தக் கிராமத்தின் மக்களில் பலரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். (செம்மீன் படிப்பகம் பொலிகண்டியின் மேற்குப் பகுதியில் எல்லைப்பகுதியில் காணப்படுகிறது) அதையே மக்கள் மத்தியில் சுமந்திரனும் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில்

செம்மீன்படிப்பக பகுதியை தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை போராட்ட ஏற்பாட்டுக்குழு மக்களுக்கு விளக்கியிருக்கிறது.

எழுச்சிப்பேரணியும் குழப்ப மனிதர்களும்! 1

பேரணி ஏற்பாட்டுக்குழு இடம் தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

1985 ஆம் ஆண்டு மே மாதம் பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் 55 பேர் பிடிக்கப்பட்டு பொலிகண்டியில் உள்ள செம்மீன்படிப்பகத்தில் அடைக்கப்பட்டு அங்கு குண்டுவைத்துக் கொல்லப்பட்டதாகவும் அதனால் அவர்களை நினைவு கூரும் வகையில் அவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடத்தில் போராட்டத்தினை நிறைவுசெய்வது தானே பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்து அந்த இடத்திலேயே மாவீரர் ஒருவரின் தாயார் சுடரேற்றிய பின்னர் நினைவுத்தூபி நாட்டப்பட்டிருக்கின்றது.

அதன் பின்னர் ஏற்பாட்டாளர்கள் அங்கிருந்து ஆலடிப்பகுதிக்குச் சென்று அங்கு மக்களை சந்தித்து விளக்கமளித்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அங்கு மதகுருமாரும் ஏற்பாட்டாளர்களும் தங்களின் நோக்கத்தினையும் நடந்த சம்பவங்களையும் விளக்கிய பின்னர் அந்த மக்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அமைதியான முறையில் பிரகடனம் வாசிகப்பட்டு சிறப்பாக நிகழ்வு நிறைவு பெற்றது 

பகிர்ந்துகொள்ள