ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது?

You are currently viewing ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது?

புலிகளின் தாக்குதல்கள் சிங்களத்தைப் போல முதலிலேயே முடிவு செய்வதல்ல. பல்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, மாதக்கணக்கில் வேவு பார்த்து, எது வாய்ப்பாக இருக்கிறதோ அதை நேரம் பார்த்து வீழ்த்துவர்.

வாய்ப்புதான் முடிவில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் சிங்களத்திற்கு வாய்ப்பு எல்லாம் முக்கியமல்ல. கொழும்பில் ஒரு குறிக்கோள் தீட்டப்பட்டு, படைகளுக்கு அளிக்கப்படும். அதை நிறைவேற்றுவதுதான் அவர்களின் கடமை. இந்தப் போரிலும் புலிகளின் திட்டங்கள் சிங்களத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே சிங்களத்தை எங்கே தாக்குதல் நடக்கும் என்ற பயத்திலேயே வைத்திருந்தார்கள். தாக்குதல் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் அனைத்து இடங்களிலும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அதிக வாய்ப்புகளை புலிகள் உருவாக்கியதுதான், அவர்களின் தாக்குதல் வேறுபாடுகளைக் கூட்டும் முக்கிய காரணி. முடிவில் சிங்களம் புலிகளின் அதிக வேறுபட்ட நகர்வுகளுக்குப் பலியானார்கள். சிங்களம் பழைய அதே உத்திகளைப் பயன்படுத்தியதால் அவர்களின் உத்திகள் எல்லாம் புலிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். மொத்தத்தில் புலிகளின் அதிக வேறுபாடுகளானத் தாக்குதல்களால், சிங்களம் தோற்றது. (படம்-3: புலிகள்-3, சிங்களம்-2). புலிகளின் வெற்றியோடு மூன்றாம் ஈழப்போர் முடிந்தது.

இப்பொழுது பின்னோக்கி பார்க்கும் பொழுது, ஏன் சிங்களம் இவ்வாறு மோசமான உத்திகளைக் கையாண்டது என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் இதுதான் சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணவங்களின் உத்தி[1]. இதை நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm) என்று அறிவியல் மொழியில் கூறுகிறார்கள் [2]. நியூட்டனின் விதிப்படி, ஓர் இலக்கை கல்லால் வீழ்த்த குறிபார்த்து வீசினால் போதும், இலக்கு வீழ்ந்து விடும். அதுபோலத்தான் உலக இராணுவங்கள் போரைப் பார்த்தன. அதிகாரிகள் உட்கார்ந்து முழுத் திட்டமிடுவர். பின்பு அத்திட்டப்படி நகர்வுகளை மேற்கொள்வர். இதுதான் சிங்களத்திற்குக் கற்பிக்கப்பட்டது, அதன்படி தான் சிங்கள இராணுவம் செயல்பட்டது. . இது மாதிரியான திட்டமிடல்கள் மோசமான உத்தி என்று சிக்கலான அமைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள் சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் தெளிவுபடுத்த ஆரம்பித்தது.

போரில் வெற்றிபெற அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாமல் சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின. இதன்பின் தான் உலக இராணுவங்கள் “நியூட்டன் சட்டகத்தை” விட்டு “சிக்கல் அமைப்புகள்” (Complex Systems Paradigm) சட்டகத்திற்கு மாறினர். அடிப்படையில் புலிகள் என்ன உத்திகளைக் கையாண்டார்களோ அவைதான் சிறப்பான உத்தி என்று உலக இராணுவங்கள் முடிவுக்கு வந்தன. உத்திகளில் புலிகள் உலக இராணுவங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.

இறுதிப் போருக்கு சிங்கள இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய உலக இராணுவத்தினர் புதிய உத்திகளை, அதாவது புலிகளின் உத்திகளைக் கையாள கற்பித்தனர். அதைத்தான் சிங்களம் பின்பற்றியது:

கொரில்லாத் தாக்குதல் பாணியில் ஆழ ஊடுருவும் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகள் சில முக்கிய தளபதிகளை இழந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியையே பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றினர். வேவுப் பணிகளையும் செய்தனர்.

ஜெயசிக்குறு போன்ற முழுத் திட்டமிடல் கைவிடப்பட்டது. எங்கெங்கே வாய்ப்பு கிடைத்ததோ அங்கங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. நீரைத் திறந்து விட்டால், வாய்ப்பு உள்ள இடங்களில் எப்படி பாயுமோ, அப்படி பாய்ந்தார்கள். இதைத் தண்ணீர் கோட்பாடு என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [5]..

சிறியதும் பெரிதுமாக அனைத்துவகைப் படை நகர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.
மொத்தத்தில் அவர்களின் சிக்கல் வரைபடம் புலிகளைத் தாண்டியது (படம்-3: புலிகள் -3, சிங்களம்-3).

புலிகள் சிங்களத்தைத் தோற்கடிக்க மேலதிக சிக்கலுடன் செயல்படவேண்டும், ஆனால் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமாக:

புலிகள் இயக்கம் உலகளவில் தடை செய்யப்பட்டு, புலிகளின் பணவரவு முடக்கப்பட்டது.
ஆயுதக் கப்பல்களை உலகநாடுகள் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுத்தன. மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்த செயற்கைக்கோள், GPS தொழிநுட்பம், புலிகளின் கப்பல்களை எளிதில் காட்டிக்கொடுத்தது. புலிகளின் அனைத்து போர் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கப்பல் போக்குவரத்து நூலிழையில் தொங்கியது.

சிங்களத்திற்கு புலிகளை வீழ்த்தும் வல்லமை என்றுமே இருந்ததில்லை. உண்மையில் புலிகளை வீழ்த்தியது சிங்களம் அல்ல, உலக நாடுகள்தான். புலிகளின் இராணுவ உத்திகளில் எந்த பிழையும் இல்லை. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியே.

உலக நாடுகள் புலிகளுக்கு உதவாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருந்தால்கூட புலிகள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிமாக இருந்திருக்கும். கடைசியில் உலகநாடுகளின் உதவி இனவழிப்பில் முடிந்தது.

பலர் எழுப்பும் ஒரு முக்கியக் கேள்வி என்னவெனில்: ஏன் புலிகள் போரை விட்டுவிட்டு சிங்களம் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்லக் கூடாது? அவ்வாறு செய்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது, மேலும் இன்று இருப்பதைவிட நல்ல நிலைமையிலேயே இருப்போம்.

புலிகள் ஆரம்பத்திலிருந்து தமிழரின் இறையாண்மையை என்றுமே அடகு வைத்ததில்லை. நவீன தமிழர் வரலாற்றில் புலிகளைப் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதில்லை. அவர்கள் என்ன முன்னுதாரணம் ஏற்படுத்துகிறார்களோ அதுதான் இனிவரும் காலம் முழுதும் எதிரொலிக்கும். புலிகள் தமிழர் இறையாண்மையை அடகு வைத்தால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு “புலிகளே விட்டுக் கொடுத்து விட்டார்கள், இனி நாம் எம்மாத்திரம்” என்று தமிழர் இறையாண்மை முற்றிலும் குழிதோண்டி புதைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அது எதிர்காலத்தில் தமிழின அழிவிற்கே இட்டுச்செல்லும். புலிகள் இன்று அழிந்தாலும், தமிழர் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தில் நம்மை வழிநடத்தப் போவது.

இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. தற்காலிக இலாபத்திற்காக நீண்டகால நன்மையை அடகு வைக்க புலிகள் எக்காலமும், தாங்கள் முற்றிலும் அழிய வாய்பிருந்தாலும், ஒப்பமாட்டார்கள். அதுதான் நடந்தது.

தமிழர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் இறையாண்மைக்குப் போராடி வெற்றி பெறுவார்கள். இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் தருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக நம்பப்படும் “மசாதா” என்ற ஒரு கட்டுக்கதை நவீன இசுரேலின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் [3]. அன்றைய இசுரேலை ரோமாபுரி ஆக்கிரமித்திருந்தது. அவர்களுக்கு எதிராக இசுரேலியர்களில் “சிகாரி” என்ற குழுவினர் போர் புரிந்தனர். அவர்களை ரோமப்படைகள் “மசாதா” என்ற மலைக்கோட்டையில் சுற்றி வளைத்தது. சரணடைவதை விட சுதந்திரமாகச் சாவதே மேல் என்று அக்கோட்டையில் இருந்த அனைவரும், பெரியவர் முதல் சிறியவர் வரை பெண்கள் உட்பட மொத்தமாக ஆயிரம் பேரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உண்மையானது அல்ல, ஒரு கட்டுக்கதை.

ஆனால் இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இசுரேலை உருவாக்க முனைந்த ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் அடிப்படை. அவர்களை சுதத்ந்திரப்போரில் வெற்றி பெற வைத்ததும் “மசாதா” உருவாக்கிய ஓர்மம் தான். இந்த கட்டுக்கதையை உள்வாங்கியவர்கள் தான் பின்பு இசுரேலின் தலைவர்களாகவும் ஆனார்கள். இன்று மசாதா தான் இசுரேலியர்களின் அடையாளம். இன்றைய இசுரேலிய இராணுவ வீரர்கள் “இன்னொரு முறை மசாதா வீழாது” (Masada shall not fall again) என்று கூறிதான் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆயிரம்பேர் சுதந்திரத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ஒரு கட்டுக்கதை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு நாட்டை உருவாக்கும் வல்லமை இருக்கும் என்றால், இலட்சக் கணக்கில் சுதந்திரத்திற்காக முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்த மக்களைப் பற்றிய நினைவு சும்மா விடுமா என்ன!

எதிர் காலத்தில் இந்தியா, இலங்கை, ஐ.நா போன்றவை இருக்குமா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால் ஈழம் என்ற ஒரு நாடு கண்டிப்பாக இருக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் உருவாக்குகின்ற உருவாக்கப்போகின்ற ஓர்மம்.

Parani Krishnarajani

பகிர்ந்துகொள்ள