ஏமன் மீது வான் தாக்குதலுக்கு தயாராகும் பிரித்தானியா – அமெரிக்கா!

You are currently viewing ஏமன் மீது வான் தாக்குதலுக்கு தயாராகும் பிரித்தானியா – அமெரிக்கா!

பிரித்தானிய கடற்படை கப்பல் மீதான செங்கடல் தாக்குதல்களுக்கு மத்தியில் பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவைக் கூட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா-பிரித்தானியா நாடுகள் தாக்குதல்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

முன்னதாக, மத்திய கிழக்கில் சமீபத்திய சூழ்நிலைகளை கண்காணித்து வருவதாகவே பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை பிரித்தானிய கடற்படை கப்பல் மீது 18 ட்ரோன்கள் மற்றும் மூன்று ஏவுகணைகளால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் முன்னெடுத்த நிலையில், பின்விளைவுகளை ஹவுதிகள் எதிர்கொள்வார்கள் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஹவுதி தளங்கள் மீது வான் தாக்குதல்களை முன்னெடுக்க அமெரிக்காவின் கருத்தை பிரித்தானியா வினவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், செங்கடலில் கப்பல்களை குறிவைப்பதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய பிரேரணையானது முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் காஸா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையில்,

இஸ்ரேலுடன் தொடர்புடைய அல்லது அந்நாட்டின் துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவான நடவடிக்கை என்றே ஹவுதிகள் கூறி வருகின்றனர். செங்கடல் மீதான தாக்குதல் நடவடிக்கையால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பயணத்திற்கு மேலும் 10 நாட்கள் தாமதமாகும் சூழலும் உருவானது.

இதனால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply