சிரியாவில் ராணுவத்தின் ஏவுகணை வீச்சில் பயணிகள் விமானம் தப்பியது. இதில் விமான பயணிகள் 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
ஏர்பஸ் 320 ரக விமானம் ஒன்று 172 பயணிகளுடன், டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்தது. அப்போது சிரிய வான்பாதுகாப்பு படை ஏவிய ஏவுகணைகள் இந்த பயணிகள் விமானத்தை தாக்கும் சூழல் உருவானது.
ஆனால் விமானம் உடனடியாக வேறு திசைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள ரஷிய விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஏவுகணை தாக்குதலில் இருந்து பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 172 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் கூறியதாவது:-
விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சரியான நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தானியங்குமயமாக்கப்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் திறமையான பணிகள் காரணமாக மட்டுமே, ஏர்பஸ் 320 விமானம் சிரியா வான்பாதுகாப்பு படையின் ஏவுகணைகள் பகுதியை விட்டு வெளியேறி மாற்று விமான நிலையத்தில் தரையிறங்க முடிந்தது.
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரிய வான் பாதுகாப்பு படைகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு பயணிகள் விமானத்தை ஒரு மறைப்பாக பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தந்திர நடவடிக்கையால் துரதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் பொறுப்பற்ற முறையில் பணையம் வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடந்த மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்த சூழலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் பயணிகள் விமானம் புறப்பட்டது.
ஆனால் ஈரான் புரட்சிகர படையினர் அந்த விமானத்தை எதிரி நாட்டு போர் விமானம் என நினைத்து தவறுதலாக சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்தில் இருந்த 170 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது நினைவு கூரத்தக்கது.
குறிப்பு:-
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.
இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. சிரியா எல்லைக்குள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களை சிரிய வான்பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிஸ்வா நகரில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 12 பேர் பலியாகினர்.
அதனை தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேல் ராணுவத்தின் எப்-16 ரக போர் விமானங்கள் 4 டாமஸ்கசின் புறநகர் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தின.
அந்த விமானங்கள் சக்தி வாய்ந்த 8 ஏவுகணை வீசி தாக்கின. அதனை தொடர்ந்து, சிரியா வான் பாதுகாப்பு படை உடனடியாக தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. தங்கள் வான்பரப்பில் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்களை குறிவைத்து, தரையில் இருந்து ஏவுகணைகளை வீசியது.