அமெரிக்காவில் தொடர்ந்துவரும் இன மற்றும் நிறவெறிக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பாவிலும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
இலண்டன் மாநகரத்தில் “கொரோனா” வைரஸ் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக கூடிய மக்கள் சட்ட விதிகளை சட்டை செய்யவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரித்தானியாவின் “இலண்டன்” மாநகரம், ஜெர்மனியின் “பெர்லின்” மாநகரம் மற்றும் டென்மார்க்கின் “கோபென்ஹெகென்” மாநகரம் ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்னாள் திரண்ட மக்கள், அமெரிக்க இன மற்றும் நிறவெறிக்கெதிரான கோஷங்களை எழுப்பியதோடு, அமெரிக்காவில் அண்மையில் கவல்த்துறையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மேம்பாடு:
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் மக்கள் கூடி, அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இன / நிரவாத கொள்கைகளை கண்டித்துள்ளதோடு, நியாமான போராட்டங்களை நடத்தும் மக்களுக்கான தமது தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.