ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் புதிய மிரட்டல்!

You are currently viewing ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் புதிய மிரட்டல்!

தங்களின் எண்ணெய் மீது விலை வரம்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என ரஷ்யா அழுத்தமாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பை ஏற்படுத்த G7 நாடுகள் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும், அவுஸ்திரேலியாவும் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, விலை வரம்பை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், விலை வரம்பை ஏற்படுத்தும் எந்த நாட்டிற்கும் ரஷ்யா எண்ணெய் விநியோகம் செய்துகொள்ளாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் தூதர் Mikhail Ulyanov தெரிவிக்கையில், இந்த ஆண்டு தொடங்கி ரஷ்யாவின் எண்ணெய் இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் முன்னோக்கி செல்ல உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

G7 நாடுகளின் விலை வரம்பு என்பது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் கடல்வழி ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும். ஆனால் 60 டாலருக்கும் குறைவாக விற்கப்பட்டால் தவிர, காப்பீடு மற்றும் மறு காப்பீட்டு நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளை கையாளுவதை தடை செய்யும்.

இதனால், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லாத நாடுகளுக்கு கூட ரஷ்ய கச்சா எண்ணெயை வரம்பிற்கு மேல் விலைக்கு அனுப்புவதை சிக்கலாக்கும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 67 டொலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த விலை வரம்பானது, அதிக எரிசக்தி மற்றும் உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு பயனளிக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.

மேலும், விலை வரம்பு ஏற்படுத்துவதால் ரஷ்யாவுக்கான வருவாய் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, விலை வரம்பு ஏற்படுத்துவது என்பது மேற்கத்திய நாடுகளின் ஆபத்தான போக்கு எனவும், ரஷ்ய எண்ணெய் தொடர்பில் தேவையானவர்கள் தேடிவருவார்கள் என அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply