சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் 120-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
படகில் இருந்த 84 பேர் துனிசிய கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டதாக துனிசியாவின் ரெட் கிரசண்ட் என்ற தொண்டு அமைப்பின் தலைவர் மோங்கி ஸ்லிம் தெரிவித்தார்.
லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்ட படகு ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் வழியில் துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்தது.
ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சட்டவிரோகமாக செல்ல முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சோ்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து சென்றுகொண்டிருந்த நிலையிலேயே நேற்று படகு கவிழ்ந்தது.
படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்ததாக ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது.
படக்கில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 3 முதல் 40 வயதானவர்கள் அடங்குவதாக துனிசியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.