ஐரோப்பாவின் பல நாடுகளில் யூத மக்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பால் தாக்கப்படுவதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உளவுக்கு என அனுப்பப்படும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத குழுக்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களே தாக்குதலை முன்னெடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய உளவு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
இந்த நபர்கள் ஈரானுக்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் யூத அமைப்புகளுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரான்சின் தெற்கில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது நான்கு தீ வைப்புத் தாக்குதல்களை இவர்கள் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பெர்லினில் உள்ள இஸ்ரேலிய வாடிக்கையாளர்களுடனும், முனிச்சில் உள்ள ஒரு இஸ்ரேலிய குடும்பத்துடனும் ஒரு சட்டத்தரணியை உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த நபர்களால் திட்டமிட்ட படுகொலை சம்பவங்களும் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கைதான நபர் Marseille பகுதியில் 2015ல் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு தொடர்பிருப்பதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
ஜேர்மனி மற்றும் பிரான்சில் யூத மக்களிடையே பீதி ஏற்படுத்தும் வகையில் ஈரான் இந்த நபரை களமிறக்கியுள்ளதாக கசிந்த ஆவணங்களில் இருந்து அம்பலமாகியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் லியோனைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என கூறப்படுகிறது.
குறித்த நபர் பொலிசார் நெருங்கியதை அறிந்ததும் ஈரானுக்கு தப்பியுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் ஈரானிய தூதரகங்கள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.