ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பில் கலந்துரையாட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாளை (28) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகளின் போது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக 27 சர்வதேச பிரகடனங்கள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்ற நிலை குறித்து ஆராய்வதே இவர்களின் விஜயத்தின் நோக்கமாகும்.
ஏப்ரல் 28ஆம் திகதி இலங்கை வந்தடையும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இது தொடர்பான மீளாய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது
இலங்கையின் ஆகக் கூடியளவில் ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.