ஐரோப்பிய நாடுகளில் இராணுவ – அரசியல் – சுகாதார நிலைமைகள் குறித்த ஒரு பார்வை!

You are currently viewing ஐரோப்பிய நாடுகளில் இராணுவ – அரசியல் – சுகாதார நிலைமைகள் குறித்த ஒரு பார்வை!

பிரான்ஸ் தற்போதைய சுகாதார நெருக்கடியில் தனது இராணுவத்தை மக்களுடன் நெருக்கமாகப் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்து வருகிறது.

நோய்த் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அரசுத்தலைவர் சுகாதாரப்போரில் இராணுவமும் இணைந்து கொள்ளும் என்று அறிவித்திருந்த போதிலும் கூட பெரிய அளவில் மருத்துவப் பணிகளுக்குள் அவர்கள் உளவாங்கப்படவில்லை.

நோயாளிகளை இடத்துக்கு இடம் வான் வழியே மாற்றும் முக்கிய சில பணிகளில் மட்டும் இராணுவ மருத்துவப்பிரிவினரின் உதவி பெறப்பட்டது. நாட்டின் கிழக்கே மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒரு அவசர மருத்துவமனையை இராணுவம் இயக்கியது. அதுவும் தற்போது மூடப்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.

வழமையான பாதுகாப்பு ரோந்துகளைத் தவிர துப்பாக்கி ஏந்திய துருப்புகள் எந்த ஒரு இடத்திலும் கூட சுகாதாரப்பணிகளோடு தொடர்பு பட்டிருக்கவில்லை.
அம்புலன்ஸ், முதலுதவி, தீயணைப்பு ஆகிய பிரிவினரே பொலிஸ் துறையின் உதவியுடன் மருத்துவப்பணிகளை களத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆழ்கடலில் தரித்து நின்ற நாட்டின் பெருமைக்குரிய விமானந்தாங்கி கப்பலான ‘Charles de Gaulle’ ஒரேயொரு தடவை கரையுடன் தொடர்பு பட நேர்ந்ததால் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியது . இதனால் அதில் பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் கடற்படையினர் வரை பெரும் உயிரபாயத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

அத்திலாந்திக் கடலில் நேட்டோ கூட்டணிப் படைகளுடன் இணைந்து கூட்டு கடற்படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இக்கப்பல் இடையில் மார்ச் நடுப்பகுதியில் பிரான்ஸின் Brest துறைமுகத்துக்கு வந்து திரும்பியிருந்தது.

இந்தச் சமயத்திலேயே கப்பலில் தொற்று நுழைந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படு கிறது.

கப்பலில் பணியிலிருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்படையினரினரில் சுமார் 60 வீதமானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சண்டைக்கப்பலின் உள்ளே- ஆயிரக்கணக்கான படையினர் நெருங்கிப் பணியாற்றும் சூழலில் – சமூக இடைவெளி பேணுவதென்பது மிகச் சிக்கலான விடயம் என்பதை கப்பலின் தலைமைக் கப்டன் ஒப்புக்கொண்டார்.

கப்பலில் வைரஸ் நுழைந்த விவகாரம் உருவாக்கிய பெரும் சர்ச்சைகள் நாட்டின் இராணுவ அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு முன் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின.

பிரெஞ்சு இராணுவத்தில் வெளிநாடுகளில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிப்பாய்கள் உட்பட சில நூற்றுக்கணக்கான படையினர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

பொதுமக்களைவிட படையினரிடையே தொற்று நோய்களின் வேகம் மிக அதிகமாக இருக்கும். முகாம்களில் நெருக்கமாக அதிக எண்ணிக்கையில் கூட்டாக தங்கியிருக்க வேண்டிய – நிறுவனமயப்பட்ட – பணிச் சூழல் அவர்களிடையே சமூக இடைவெளி பேணலை சாத்தியமற்றதாக்கி விடலாம்.

சுகாதார நடைமுறைகள் அதி உயர் தரத்தில் பின்பற்றப்பட்ட போதிலும் கூட ‘Charles de Gaulle’ கப்பலில் நூற்றுக்கணக்கான படையினர் குறுகிய நாட்களுக்குள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியமைக்கு இந்த நெருக்கமான பணிச் சூழ்நிலையே காரணமாகும்.அமெரிக்காவின்
‘USS Theodore Roosevelt’ விமானந்தாங்கி கப்பலும் இதுபோன்ற பெரும் வைரஸ் தொற்றினை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைக் கருத்தில் கொண்டே முக்கிய நாடுகள் பலவும் தங்களது முப்படைகளை சுகாதாரப்பணிகளில் இருந்து தள்ளி வைத்திருக்கின்றன.

பொதுவாக இயற்கைப் பேரிடர்களின் போது ஆயுதப் படைகள் சிவில் சேவைக்கு அழைக்கப் படுவது வழமை. ஆனால் தற்போதைய நெருக்கடி ஒர் உயிர்கொல்லி நோய்த் தொற்று சார்ந்தது. இந்த சமயத்தில் துருப்புகள் பெருமளவில் தொற்றுக்கு ஆளாகுவது நோயின் பரம்பலை அதிகரிப்பதுடன் நாட்டின் பாதுகாப்பு ஸ்திரத் தன்மையைப் பாதித்து விடும் என்பதில் வல்லரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

இதனால் தான் பல நாடுகளில் வைரஸ் நோயாளிகளை இனங்காணல், மீட்டெடுத்தல், இடத்துக்கிடம் நகர்த்துதல், தனிமைப்படுத்தல் முகாம்களைப் பராமரித்தல் போன்ற அவசர சுகாதாரப் பணிகள் இயன்றவரை சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.

சுகாதாரப் பணியாளர்களால் சமாளிக்க முடியாத – அவர்களது கையை மீறிப்போகின்ற – ஒர் அபாய கட்டம் உருவாகும் வரை அதற்கு முன் அவசரப்பட்டு இராணுவத்தைக் களமிறக்குவதில் உள்ள ஆபத்துகளை அரசுகள் உணர்ந்துள்ளன.

பிரான்ஸின் இராணுவ அமைச்சகம் படையினருக்கு என்று பெருந்தொகை குளோரோகுயின் மருந்தை சீனாவில் இருந்து தருவித்து களஞ்சியப்படுத்தி உள்ளது. இரகசியமாக செய்யப்பட்ட இக் கொள்வனவு பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் கசிந்ததால் வெளியே அப்பட்டமாகி விட்டதாக ஏ.எப்.பி செய்தி ஒன்று சொல்கிறது.

இரு நாடுகளின் கொடிகள் பொறிக்கப்பட்டு ‘குளோரோகுயின்’ என லேபல் இடப்பட்ட சுமார் 70 கிலோ எடையுடைய பொதிகள் இராணுவத்தின் மத்திய மருந்தகத்துக்கு தருவிக்கப்பட்டிருப்பது பற்றிய காட்சிகள் முதலில் சமூகவலைத்தளம் ஒன்றிலேயே வெளியாகின. அதன் பிறகே அதிகாரிகள் அதனை ஒப்புக்கொண்டனர்.

ஒருவேளை வைரஸ் தடுப்பு சிகிச்சைக்கு உகந்தது என்று குளோரோகுயின் மருந்து உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதனைப் படையினரது அவசர தேவைக்குப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் – ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக- இந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தளவுக்கு தத்தமது படைகளின் பாதுகாப்பு விடயத்தில் நாடுகள் மிகுந்த சிரத்தையாக உள்ளன.

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான இந்தப் போரில் முன்னரங்கில் மருத்துவர்களை நிறுத்தி அவர்களது ஆலோசனைப்படி ஏனைய துறைகள் இயங்குவதை பிரான்ஸிலும் ஏனைய பல ஜரோப்பிய நாடுகளிலும் அவதானிக்க முடிகிறது.இங்கெல்லாம் சுகாதாரத் தளத்தில் நின்றே அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

சுகாதார அமைச்சரே கட்டளைத் தளபதியாக விளங்குகிறார். முக்கிய முடிவுகளை சுகாதார நிபுணத்துவ விஞ்ஞானிகள் குழுவே எடுத்து அதனை சுகாதார அமைச்சுக்கு வழங்குகின்றது.

அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை நகர்த்த வேண்டிய அவசரமும் அவசியமும் அரசுத் தலைமைகளுக்கு இருப்பினும் கூட சுகாதாரம் சார்ந்த முடிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் எடுக்கப்படுகின்றன. இதற்காக இந்த உள்ளிருப்பு சமயத்தில் நாடாளுமன்றத்தை அதன் கட்டடத்தில் கூட்டும் முயற்சிகளை விடுத்து- விதிமுறைகளைப் புறம்தள்ளிவிட்டு- கூட்டாக கலந்துரையாடக்கூடிய காணொலி வசதிகளைப் பயன்படுத்தி (Vidio conversation) அவசியமான சமயங்களில் நாடாளுமன்றம் திரைகளில்(Screen) கூடுகின்றது.

பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் அதிபர் மக்ரோனின் ஆளும் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ள போதிலும் கூட உள்ளிருப்பில் இருந்து மக்களை விடுவிக்கும் திட்ட வரைவை அவரது கட்சியினர் கூட எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இராணுவ – அரசியல் – சுகாதார நிலைமைகள் இப்படி உள்ளன.

சுகாதார பெளதீக, ஆளணி வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அரசியல் தலைமைகள் தக்க தருணத்தில் எடுக்கின்ற முடிவுகளே தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இதற்கு அமெரிக்காவை உதாரணம் காட்டும் நிலைமை இப்போது உருவாகியிருக்கிறது.

அமெரிக்காவின் இன்றைய நிலைமையை விவாதிப்பவர்கள் அதன் தலைமையை விமர்சிக்கும் போக்கை பரவலாகப் பார்க்க முடிகிறது.

‘கோவிட் 19’ வைரஸ் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட சில எச்சரிக்கைகளை பல நாடுகளும் புறக்கணித்து விட்டதாக பாதுகாப்பு மற்றும் தந்திரோபாயக் கற்கைகளுக்கான ஜெர்மனிய நிலையம் (German Institute for Defence and Strategic Studies – GIDS) குறிப்பிடுகிறது.

“இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கையாள்வதில் நாடுகள் தத்தமது அரசியல் பாரம்பரியத்தின் (Political cultures) தளத்தில் நின்று ஆரம்ப எச்சரிக்கைகளை பகுதியாக மறுத்து அல்லது ஓரளவு அலட்சியம் செய்யும் போக்கில் நடந்துகொண்டுள்ளன” என்று ஜெர்மன் நிலையத்தின் மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

இதற்கு அவர் அமெரிக்காவை சிறந்த உதாரணமாகக் காட்டுகிறார்.

பெருந் தொற்று நோய்களை நேரகாலத்துடனேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை வெகு விரைவாக முன்னெடுக்கக் கூடிய போதிய வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்கா-

‘கொவிட் 19’ வைரஸின் பரம்பல் நிலைமையை தக்க தருணங்களில் அறிந்திருந்தும் கூட, அவற்றைக் கவனத்தில் எடுப்பதற்கு அதன் தற்போதைய அரசுத்தலைமை முன்னுரிமை அளிக்கத் தவறிவிட்டது -என்று அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

ஒரு பேரழிவு நிலைமையில் கூட மக்களின் சுகநலம் சார்ந்த தீர்மானங்களை உள்நாட்டு அரசியல் ஆதாயம் கருதி அல்லது அசட்டுத்தனமாக எடுக்கின்ற சில சிறிய நாடுகளது வரிசையில் அமெரிக்க வல்லரசும் இணைந்து கொண்டமை உலகப் போர்களின் பின்னரான உலக ஒழுங்கின் சரிவையே காட்டிநிற்கின்றது.
01-05-2020

(பாரிஸ். – குமாரதாஸன்)

ஐரோப்பிய நாடுகளில் இராணுவ – அரசியல் – சுகாதார நிலைமைகள் குறித்த ஒரு பார்வை! 1
பகிர்ந்துகொள்ள