ஐஸ்லாந்தில் இடம்பெற்ற பாராளுமன்றத் தோ்தலில் அதிகளவில் பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் பாராளுமன்றில் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐரோப்பாவின் முதல் நாடாக ஐஸ்லாந்து பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்ட நிலையில் 63 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு 33 பெண்கள் தோ்ந்தெடுக்கப்படுவது பெரும்பாலும் உறுதியானது.
எனினும் உத்தியோகபூா்வ முடிவுகளை ஐஸ்லாந்து தேசிய தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.
உலகில் ருவாண்டா, கியூபா மற்றும் நிகரகுவா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் ஆண்களை விட அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 50/50 பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன.
ஐரோப்பாவில், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை முறையே பாராளுமன்றத்தில் 47% மற்றும் 46% பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன.
மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கையில் 371,000 மக்களைக் கொண்ட வடக்கு அட்லாண்டிக் தீவான ஐஸ்லாந்து உலகின் பாலின சமத்துவக் கொள்ளையைக் கொண்ட முதல் நாடாக வகைப்படுத்தப்பட்டது.
இத் தேர்தலில் ஜஸ்லாந்தின் பிரதம மந்திரி கத்தரின் ஜாகோப்ஸ்டோடிர் தலைமையிலான, இடதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையாக இருந்தபோதும், பல இடங்களில் இக்கட்சி ஆசனங்களை இழந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஜாகோப்ஸ்டோடிரின் இடதுசாரிகள் கட்சி பெரும்பான்மை பெற்றால் கன்சர்வேடிவ் சுதந்திரக் கட்சி மற்றும் அடிப்படைவாத முற்போக்குக் கட்சி என்பன இடதுசாரிக்கட்சியுடன் இணைந்து செயற்படும் எனத் தெரியவருகிறது. இதன்படி மற்றயகட்சிகளுடன் இணைந்து ஐஸ்லாந்தில் பெண்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.
இத்தேர்தலில் 21வயதான லென்யா ரன் ரஹா ஹரிம் எனும் பெண்ணும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐஸ்லாந்தின் மிகச்சிறிய வயதில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் இவரென குறிப்பிடப்பட்டுள்ளது.