இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விடயத்தில் தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசியலமைப்புக்கு முரணான முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாட்டிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கையில் ,
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும். உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டதோடு , மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான பொதுக் கருத்துக் கணிப்புக்கள் அரசாங்கத்திற்கு மிகவும் பாதகமானவை என்பதை உணர்ந்து, நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சில சுற்றறிக்கைகளை வெளியிட்டு, அமைச்சரவை சில தீர்மானங்களை எடுத்துள்ளது.
இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், அரசியலமைப்பின் புனிதமான ஏற்பாடுகளை அப்பட்டமாக மீறும் வகையிலும் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் நிறைவேற்று அதிகார சபை அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுகின்றது. எனவே, இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த விடயத்தில் தலையிடுமாறு ஐ.நா. அலுவலகத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.