ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இலங்கையின் இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் செயற்படுத்தக்கூடிய சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி தமிழ்த் தேசிய அரசியல் கூட்டுக்கள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து பொது ஆவணமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் மேற்படி தரப்புக்களின் பதினொரு பிரதிநிதிகளே கையொப்பம் இட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் பொது ஆவணத்தினை உடன்படுவோர் அதனை வழிமொழிந்தும், அதனை மேலும் வலுப்படுத்தி உறுப்பு நாடுகள் தீர்மானத்தில் உள்ளீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மற்றும் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அதனையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடு எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் செயற்பாட்டின் மூலம் ஐ.நா.மனித
உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடத்தில் வலுவான கோரிக்கையொன்று சென்றடைவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.