ஐ.நா கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்: போர் நிறுத்தம் அறிவிப்பு!

You are currently viewing ஐ.நா கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்: போர் நிறுத்தம் அறிவிப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போலியோ பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறார்களுக்கு தடுப்பூசி அளிக்க போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக காஸா பகுதியில் போலியோ பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால், இஸ்ரேலுக்கும் பாதிப்பு உறுதி என்பதை உணர்ந்துகொண்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால் இந்த வார இறுதியில் முதல் தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட உள்ளது. காஸாவில் உள்ள 640,000 சிறார்களுக்கு தடுப்பூசி அளிக்க ஐ.நா தயாராகி வருகிறது. ஆகஸ்டு 23ம் திகதி உலக சுகாதார அமைப்பு உறுதி செய்த விடயம் என்னவென்றால்,

காஸா பகுதியில் குறைந்தது ஒரு குழந்தையேனும் வகை 2 போலியோ பாதிப்பால் மொத்தமாக முடங்கிப்போயுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இப்படியான சம்பவம் இதுவே முதல் முறை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காஸாவில் கட்டம் கட்டமாக ராணுவ நடவடிக்கை முடக்கப்படும் என்றும், அப்படியான பகுதியில் தடுப்பூசி முகாம் முன்னெடுக்கவும் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனையடுத்து மூன்று நாட்களில் கட்டம் கட்டமாக தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்படும் என்றே உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவை ஏற்படும் என்றால் மேலும் ஒரு நாள் நீட்டிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதல் இரண்டு சுற்று தடுப்பூசி முகாமானது சனிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது. 25,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி போத்தல்கள் காஸாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அவைகளை பாதுகாக்கும் கருவிகளும் உடன் எடுத்துவரப்பட்டுள்ளது.

போலியோ தொற்று பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர காஸாவில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட 640,000 சிறார்களில் 90 சதவிகிதம் பேர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால் பெரும்பாலான மக்கள் வெகுதொலைவில் பெரும் கூட்டமாக வசித்து வருகின்றனர். அவர்களை நாடுவதே தற்போது பெரும் சவாலாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply