அமெரிக்கா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு, ஹைட்ராக்ஸி குளோரகுயின் (Hydroxychloroquine) மாத்திரைகளை தகுந்த நேரத்தில் வழங்கி உதவிய இந்தியாவுக்கு ‘மரியாதை’ செலுத்தி நன்றி தெரிவிப்பதாக, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டோனியோ கட்டாரஸ் (António Guterres) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், கொரோனா தொற்று சிகிச்சைக்கு, “Hydroxychloroquine” மாத்திரைகளின் தேவை அதிகரித்துள்ளது. அதிபர் Donald Trump விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த மருந்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா அகற்றியது. இதையடுத்து, இந்த மாத்திரைகளை தருமாறு பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதால், தற்போது சுமார் 55 நாடுகளுக்கு இந்தியா வர்த்தக அடிப்படையில், சில நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், அமெரிக்கா, ரஷ்யா, பிருத்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, இலங்கை, எகிப்து, மியான்மர், கஜகஸ்தான், உக்ரைன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் பலன் அடைந்துள்ளன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் Trump, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில், இந்தியாவின் இந்த பணியை ஐ.நா. பொது செயலாளர் “António Guterres“, வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும், “Hydroxychloroquine” மருந்தை, 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்துள்ள நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார். இதற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், சல்யூட் அடிக்கிறேன் என்று கூறியுள்ள அவர், இந்தியா போலவே, மற்ற நாடுகளும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த, மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.