ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
இம்முறைக் கூட்டத் தொடரில் அரசாங்க தூதுக்குழுவினர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
30–1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில் இம்முறைக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ள நிலையில் இலங்கையானது மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுகின்றது என்பதனை அறிவிக்கவுள்ளார்.
இதேவேளை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அறிவித்துள்ளார். அவர் அதன் சாரம்சத்தை பேரவையில் முன்வைக்கவுள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாகவே எதிர்வரும் 27 ஆம் திகதி பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் உரையாற்றவுள்ளனர்.
இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் இலங்கைக்கு ஏற்கனவே சமர்ப்பித்திருந்தபோதிலும் இலங்கை அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேரவையில் உரையாற்றுகின்றபோது அறிக்கைக்கு பதிலளிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்த 30-1 என்ற பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக நிறைவேறாததன் காரணமாக 2017 ஆம் ஆண்டு 30-1 என்ற பிரேரணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று தெரிவித்தே 34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இந்தப் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெனிவா பிரேரணை தொடர்பாக வெளிவிவகார அமைச்சினால் மீளாய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் பிரேரணையிலிருந்து விலகுவதாக தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு இது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி தலைமையில் வெ ளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது இராணுவ தளபதிக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயண தடை மற்றும் 2015 ஆம் ஆண்டில் கடந்த முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணை குறித்த மீளாய்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
இதன்போதே பிரேரணையிலிருந்து விலகுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30–1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து விரிவான சுயாதீமான பொறுப்புக்கூறல் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.