ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பல சக்தி வாய்ந்த நாடுகள் கூட்டாக இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.
இதன்படி, மனித உரிமைகளை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த மனித உரிமைகள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுவதும் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வடக்கு அயர்லாந்து, வடக்கு மாசிடோனியா, ஜெர்மனி, மலாவி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மத்திய குழு இந்த தீர்மானத்தின் வரைவை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் முதலிரண்டு விடயங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள 19 விடயங்களில் 9 விடயங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மை நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பின்மை, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை மற்றும் குடும்ப அலகுகளின் வருமானம் குறைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை கைது செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறையின் போது உயிரிழப்புகள் – காயங்கள் – சொத்துகள் அழிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை உடனடியாக விசாரித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது தேவையான சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய குழு மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரைக்கிறது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதை நிறுத்தவும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.