ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கஜேந்திரகுமார், இருப்பினும் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதை அமெரிக்கா விலகுவதைக் காரணங்காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உறுப்புரிமையிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா வெளியேறுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கை விவகாரத்தில் தோற்றுவிக்கக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் பலரும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள அமெரிக்கா எதிர்வரும் 58 ஆவது அமர்வில் வெளியேறவுள்ளதால் நாட்டுக்குப் பெரும் சாதகநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க பாரிய மாற்றங்கள் எவையும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனால் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதை அமெரிக்கா விலகுவதைக் காரணங்காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தக்கூடும் என விசனம் வெளியிட்டார்.