ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை முன்னேற்றத்தை காணவில்லை என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளது. எனவே இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சமுகம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ், ஐ.நா பொதுச்சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் உட்பட 20 முன்னாள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
உருவாகிவரும் போக்குகள் குறித்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட இந்த அறிக்கை நிலையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் மனித உரிமை மீறல்கள், மோதல்கள் இடம்பெறுதலை தடுப்பதற்கான முக்கியமான விடயமாக, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் அநீதிகளிற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான உறுதியான சர்வதேச நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுப்புநாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டு சர்வதேச நியாயாதிக்கத்தின் மூலம் நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமை ஆணையாளர் விடுத்த வேண்டுகோளை நாங்கள் எதிரொலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதை நிறுத்த மறுப்பதால் சர்வதேச நீதிமன்றம் போன்ற காணப்படுகின்ற சர்வதேச வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலிற்கான வழிவகைகள் குறித்து ஆராயவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.