தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.
இராணுவ மயமாக்கலுக்குள் செல்லும் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு வலுசக்தி அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டியவர் அல்ல, ஒட்டுமொத்த அரசாங்கமும் இதற்கு காரணமாகும். வலுசக்தி என்பது மிக முக்கியமான அபிவிருத்திக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்த சபையில் உள்ள சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். இதுவரை காலமாக முறையாக கொள்கைத்திட்டம் ஒன்று இல்லாது அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கு காரணமாகும்.
நாட்டின் வரவு செலவு திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்கு 10.3 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் யார் உங்களின் எதிரிகள் என்பதை கூறுங்கள். இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடரவில்லை. அப்படி இருந்தும் இந்த நாட்டில் ஒரு இனக்குழுவிற்கு எதிராகவே நீங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள்.
ஏனென்றால் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கவோ அவர்களை அங்கீகரிக்கவோ நீங்கள் தயாராக இல்லை. இது தான் அவர்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுக்கவும், அவர்களை கொன்று குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கை கையாளப்பட்டது. 32 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை கையாளப்பட்டது.
அன்று தமிழர்கள் போன்று இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் உங்களின் ஊழல்வாத அரசாங்கத்தை கொண்டுசெல்ல இவ்வாறான அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றீர்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்குள் நாடு தள்ளப்பட்டு வருகின்றது.