சீனாவின் வுஹான் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், உலகின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒரு மில்லியன் மக்கள் வீட்டுக்குள் சிறைவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஜூலை 27 முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை அனுசரிக்க வேண்டும் என Jiangxia மாவட்ட மக்களையும் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகளால் குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாது என்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் பூரணமாக குணமடையும் மட்டும் நகரத்தை விட்டும் வெளியேற முடியாது என்றே கூறப்படுகிறது.
பொதுமக்கள் அதிகம் திரளும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ளது. அரசு பேருந்து சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன் வழிபாட்டு தலங்களும் மூடப்படும் என்றே கூறப்படுகிறது.
வுஹான் நகரில் மொத்தம் நால்வருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நகர நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
இருவருக்கு கொரோனா சோதனைக்கு பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர், நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றே கூறப்படுகிறது.
2019 ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வுஹான் நகரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
மட்டுமின்றி உலகின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட நகரம் வுஹான். வுஹான் நகரில் அமுலுக்கு கொண்டுவந்த ஊரடங்கு திட்டங்களையே பின்னர் உலக நாடுகள் பின்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.