தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை ஒரு போதும் நாங்கள் மீறி செயற்பட போவதில்லை. கொள்கையை முன்னிறுத்தியே எமது செயற்பாடுகள் அமையுமே தவிர கொள்கை இல்லாதவர்களுடன் ஒருபோதும் நாம் சேர்ந்து பயணிக்கப் போவதில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்கையில் உறுதியாகச் செயற்படுகிற மாற்று என மக்கள் எமக்கு வழங்கிய அங்கீகாரத்தை ஏற்று அதனடிப்படையிலையே செயற்படுவோம். ஒற்றுமை என்ற பெயரில் போலியான தரப்புக்களுடன் ஒருபோதும் நாம் கூட்டுச் சேர்ந்து பயணிக்க மாட்டோம் என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் ஆயர் இல்லத்தில் ஆயர் ஸை;ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்று; சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கயேந்திரகுமாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்தாவது..
எமது கொள்கைக்கு மக்கள் வழங்கிய ஆணையை நாம் மதிக்க வேண்டும். அந்த ஆணைக்கமையவே எமது செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இந்த இடத்தில் கொள்கையை கைவிட்ட தரப்புக்களுடன் நாம் ஒரு போதும் சேர்ந்து பயணிக்கவோ அல்லது அவர்கள் பின்னால் செல்லவோ முடியாது.
ஆகவே எங்களுடைய கொள்கை இலக்கை அடைவதற்கான அனுகுமுறையை நாங்கள் முன்னெடுக்கிற போது மற்றத் தரப்புக்கள் எங்களுக்கு அதற்கான ஒத்தாசையை வழங்கலாம். அதுவும் தாங்களாகவே விரும்பி அதனைச் செய்வதாக இருந்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம்.
ஆனால் அவர்களுடன் நாங்கள் ஒருபோதும் செல்ல மாட்டோம். அவர்கள் விரும்பினால் எம் பின்னால் வரலாம். எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில் எமது கொள்கை இலக்கை அடைவதற்கு நாம் உறுதியுடன்; நேர்மையாக பயணிப்போம் என்றார்..