புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்?
புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வாமித்ரா என்பவர் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட நிலையில், பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்தப் படம் தமிழ்நாட்டில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக்கடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
“ஈழத் தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
புதியவன் இராசையா என்பவர் விடுதலைப்போராட்டத்தையும் மாவீரர்களையும் மிகவும் கேவலமாக விமர்சனம் செய்து எதிர்த்து வருகின்ற ஒரு எட்டப்பன், இவரின் இத்திரைப்படம் புலம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம் சென்றுள்ளார்.
அன்பான தமிழக மக்களே இந்த விசமியின் திரைப்படத்தை புறக்கணிக்குமாறு நாமும் விநயமாக கேட்டுக்கொள்கின்றோம்.