ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகும்படி வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
32வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது பற்றிய சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் மற்றும் விளையாட்டு வீரர்கள் காணொலி சந்திப்பு மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக் போட்டி நடைபெற 4 மாதங்கள் உள்ள சூழலில், போட்டியை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது.
ஆதலால், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக தயாராகும்படி விளையாட்டு வீரர்களை அறிவுறுத்தியுள்ளனர். 56 ஆண்டுகளுக்கு பின் கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.